🔘🔘
நான் முடித்த இடத்தில்
நீ துவங்கும் அந்தாதி
முத்தம். ❤
🔘🔘
நீ ஞாபகப்படுத்துவதற்கென்றே,
எதோ ஒன்றை மறந்து தொலைக்கிறேன்
அனுதினமும்.
🔘🔘
குழம்புக் கரண்டியின்
குழிந்த பக்கத்தில்
தலைகீழாய் தெரியும் உலகம்.
குழம்பிப்போய் நிற்கிறேன்.
ஆகாசத்தில் மீன்கள் நீந்திக்கொண்டிருக்கின்றன..
நீலக்கடலில் பறவைகள் பறந்துகொண்டே....
🔘🔘
கட்டங்களுக்குள் சிறைபட்டிருக்கும்
நாட்களின் மீதோ,
வட்டத்திற்குள் அடைபட்டிருக்கும்
நேரங்களின் மீதோ,
எனக்கு நம்பிக்கையில்லை..
ஆதூரமாய் அணைத்து
முகம் பார்த்துச் சிரித்தால் பகல்.
ஆலிங்கனம் செய்தபடி
கண்சொக்கிக் கிடந்தால் இரவு.
🔘🔘
கொல்வதானால்
ஒற்றைச் சிலுவையில்
ஒன்றாய் அறைந்து
கொல்லுங்கள்.
"நச்" சென்று நடுமார்பிலிறங்கும்
ஆணியிலிருந்து
ஒழுகும் ரத்தம் உங்களுக்கு
அமைதியைத் தருவதாக
ஆமென்.!
🔘🔘
No comments:
Post a Comment