Monday, June 13, 2016

அன்புக்கூறுவேன் இன்னும் அதிகமாய்..



ஆகவே,

    பிரியம் என்பது பித்துநிலை,

    ஆட்டிச சிறுமியின் திறந்த வாயில்

    எப்போதுமிருக்கும் புன்னகை.

    பைத்தியக்காரர்களின் பைத்தியம்.



உங்கள் காதலனையோ, இல்லை காதலியையோ,

    மேகங்களற்ற இரவில் நட்சத்திரங்களை இணைத்து,

    அரூப கோட்டோவியமாக மாற்றவியலுமெனில்,

    தழுவமுடியுமெனில், சுகிக்கமுடியுமெனில்,

    தனிமையின் அந்தரங்கமான பொழுதில்

    உமது விதானத்தில் வானிலையை

    மாற்றிக்கொள்ள ஏகுமெனில்,



நல்லது.



    நீங்கள் பிரியத்திற்கு பிரியப்பட்டிருக்கிறீர்கள்.!



ஆகவே,

    காதலென்பது கடவுளோடு பிராத்திப்பது.

    கைவிடப்பட்ட நாய்க்குட்டிக்கு,

    திரியில் பால் நனைத்து பருகத்தருவது..

    அப்பளத்தின் கொப்பளங்களாய் இருக்கும்

    உங்களது ரணம்பட்ட வாழ்வை பிதுக்கி

    துயரச்சீழை வெளியேற்றுவது,

    பின்னர், இரத்தம் வடிந்து தீர்ந்த பின்

    அப்புண்ணில் மார்பழுந்தக்கிடப்பது.



உங்கள் காதலனுக்கோ, இல்லை காதலிக்கோ,

    பாம்பு பின்னிய ஆப்பிள் கொடியிலிருந்து

    ஒரு கனியை கொய்து தருவதானால்,

    உங்கள் தலைமீது அழுத்தும்

    ஊழிச்சுமையை இன்னொருவருக்கு

    கைமாற்றிக்கொள்ளக்கூடுமெனில்



நல்லது.



    நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்..!



ஆகவே,

    நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்,



நல்லது.



உன் இடமார்பில் என் வலக்காலைஊன்றி



நிலம் அதிர வான்நோக்கிகத்திசொல்லுவேன்



உன்னை காதலிக்கிறேன் என்று..!

No comments:

Post a Comment