மரகத வீணையென மடியிலமர்த்தி,
நரம்புகளை ஸ்வரக்கம்பிகளாக்கி,
அம்ருதவர்ஷினி ராகமிசைத்து,
மழை தருவிக்கிறாய்
வருணனென.
அகண்ட தொடையை
தட்டிச் சுரம் சேர்த்து,
உடும்புத் தோல் போர்த்திய
கனகதப்படையென காதலிசைத்து,
என் நீள் துயிலை நீ கலைத்தது
அடாணா ராகம்.
விரல்பத்தில் இதழ் பதித்து,
ஹார்மோன்கள் கதகளியாட,
ஹார்மோனியமாய் நீ இசைத்தது,
இரவின் தணுப்பேற்றும்
மோகச் செஞ்சுருட்டி.
காதுமடலை விரலால் சுண்டி,
கீதம் பாடிக் கிண்கிணியாட
நான் கண்ணயர நீ காதலிசைத்தது
நீலாம்பரி.
இதழை மூடி இதழைத்திறந்து
கட்டைவிரலை வாயிற்கவ்வி,
பொல்லாக் கண்ணனாய்
குழலென இசைத்தது
புலரும் பொழுதில்
பூக்கள் எழுப்பும்
பூபாளம்.
இசை காதலின் பேறுரு..
நான், நீ மீட்டும் ஸ்வரம்.
நீ இசைக்கடவுள்.!
No comments:
Post a Comment