Ø
மழைநீர் புகுந்த என் வீட்டில்
கட்டிலில் கால்குத்தி
அமர்ந்திருக்கிறேன்.,
நாற்புறம் நீர் சூழ்
கட்டில் தீவு...!..
Ø
மழையில் முறிந்த
முல்லைக்கொடியில்
மண் படா பூக்களை
சேகரித்துத்தொடுத்து வைத்தேன்..
உன் நினைவில்
சூட்டிக்கொண்டு
சுடர்கொடியானேன்..!.
Ø
மழையின் கொண்டாட்டங்களை
உன்னோடு ரசித்திருக்கிறேன்.
மழையின் துயரங்களில்
உன் மடியில்லை.
நீர் புகா நிலத்தில்
தூரத்தில் துயரத்தை
மழையென “ தெறிக்கவிடலாம்”
வா..!.
Ø
புழுக்களையும் பூச்சிகளையும்
சுமந்து புற்றேகும் எறும்புகள்.
குறு அலகில் கூடுகட்டிக்குடிபுகும்
பறவைகள்.
பண்டகசாலையில் பதுக்கல் செய்யும்
வணிகமார்கள்.
கருப்பட்டியையும் அரிசியையும்
பரண் பத்தாயத்தில்
சேமிக்கும் பாட்டிமார்கள்.
ஊரெல்லாம் குறிப்பறிவிக்கிறது
மழை நாளை.
நானும் மனதினுள் பத்திரப்படுத்துகிறேன்..
உனது ஓர்மைகளை..!.
Ø
த
தா
த் தத் தா..
ஒரு முத்தந்தா..
த
தா
த் தத் தா..
ஒரு முத்தந்தா..
ஒரு முத்தந்தா..
ஒரே தாளகதியில் விழுகிறது
முற்றத்து மழை..!.
வெப்பமண்டல உவர் நில தரை போல
வெடித்து கிடக்கிறது
உதடு.
மழைபோல் நனைத்து ஈரமாக்கு..!.
Ø
கவிதை அல்லாது எதைப்பற்றி பேசுவது.?.
நாள் மலர் காசு பிறப்பு
எழுத்து அசை சீர்
அடி தளை தொடை
இலக்கணம் மீறாத
மரபுக்கவிதை நான்.!.
மீசை என்னும் தலைப்பிட்டு,
ரெட்டைவரி உதடு கொண்ட ஹைக்கூ கவிதை நீ.!.
வாழ்தலின் அழகியல் பாடும் நவீன கவிதை நாம்.!.
வேறு எதைப்பற்றி பேசுவது கவிதை அல்லாது.?.
Ø
நம் பேர் பொறித்த சங்கு
தவறிவிழுந்து உடைந்தது,
உடைந்த சங்கில்
ஒலிக்கிறது
கடலின் குரல்..!.
Ø
மழை நின்று
மௌனத்தில்
ஒலிப்பது
உன் குரல்.
நிசப்தம் என்பது
நீயின்றி இருப்பது..!.
Ø
கூம்புக்குடுவையில்
ஒட்டாது உருளும்
பாதரசமென.,
நிலையற்று தவிக்கிறது
மனசு..!.
Ø
இன்றைய நாளின் நேற்று நினைவினிலில்லை.
நாளையை நினத்து கடத்திக்கொண்டிருக்கிறேன்.
நேற்றின் நாளையான இன்றைய நாளை..!.
Ø
கண்ணீரில் மூழ்கும்
துயரத்தின் எடை
வெளியேற்றப்பட்ட
கண்ணீரின் எடைக்கு
சமம் என்கிறது
பிரிவாற்றாமையின் ஆர்கமெடீஸ் தத்துவம்..!!
No comments:
Post a Comment