Thursday, June 9, 2016

..நான் இங்கு சுகமில்லை நீ.?.





கடவுளே
அவன் காய்ச்சலை எனக்கும்
என் காதலை அவனுக்கும்
இப் பக்தைக்கு பரிமாற்று.


ஹலோ சொல்லும்போதே
கண்டுபிடித்துவிடுவேன்,

நீ

காதலில் இருக்கிறாயா.?.
இல்லை
காய்ச்சலில் இருக்கிறாயா.? - என்று

உன் அம்மாவுக்கு மட்டுந்தான் தெரியுமா.?.
நானறிய மாட்டேனா என்ன..??.


உன் நெற்றி முத்தத்திற்காக
நித்தம் வரட்டும்
கடுஞ்ஜுரம்  எனக்கு..!..


உன் சின்ன காய்ச்சல்தான்
என் பெரிய கவலை
தனக்கு வந்தால் தான் தெரியும்
காதலும் காய்ச்சலும்.?!.


சோம்பலாய் படுத்திருக்கிறாய் .
சோகையாய் புன்னகைக்கிறாய்.

கண்ணுக்குள் காதல் கலைந்து,
ரொமாண்டிஸம் உதட்டில் ஒளிந்து.


காதல்
வாழ்தலை பற்றிய
அச்சத்தையும்,

காய்ச்சல்
வாழ்க்கையை பற்றிய
அச்சத்தையும்
கற்பிக்கிறது.


உள்ளங்கை அழுந்த உரசி சூடேற்றலாம்,

வேளை பார்த்து விழுங்கத்தரலாம்
மாத்திரையும் மருந்தையும்.

நெற்றியில் முத்தமிட்டு,
திருநீற்று பொட்டு வைக்கலாம்.

இல்லை,

சேர்த்தணைத்து முத்தமிட்டு
சேர்த்து கொள்ளலாம் உன்னுடைய காய்ச்சலை..

நா வேறென்ன செய்யட்டூ(ம்)..?.


கைக்குழந்தையைபோல்
ஈனஸ்வரத்தில் முனங்குகிறாய்.

கன்னித்தாய் என உணருகிறேன்.

ஆலயத்தில் அகல்விளக்கையும்
தேவாலயத்தில் மெழுகுவர்த்தியும்
ஏற்றி வழிபடுகிறேன்.

ஒரே சுடர்
ஒரே பிராத்தனை
இரண்டிலும் ..

சாமியில் என்ன பெரியசாமி சின்னசாமி .?.


"நா உன்ன பத்திரமா பாத்துக்கிறேன்" ன்னு
நா சொல்றத விட,

"நா உன்ன பத்திரமா பாத்துக்கிறேன்" ன்னு
நீ சொல்றது தான் நல்லாருக்கு..


சாதாரண காய்ச்சல்
சளி காய்ச்சல்
வைரல் ஃபீவர்
இன்ஃபெக்‌ஷன்
ஆர்.பி.சி. டபிள்யு.பி.சி.
பயோ ஹெமிஸ்ட்ரி
இதெல்லாம் எனக்கு தெரியாது,

புரியவும் செய்யாது.

எனக்கு தெரிந்ததெல்லாம்

உனக்கு காய்ச்சல்.

உனக்கு காய்ச்சல்.

உனக்கு காய்ச்சல்.


சோபிக்க முடியாத சோம்பலில்

படுத்திருக்கிறாய்..

நித்தம் ஏங்காத நாட்களே இல்லை..
நீ தூங்கும் தலையணையாய்

பிறந்திருக்கக்கூடாதா என்று.!.


ஏன்டீ
"உம்"முன்னு இருக்க
என்னும் அம்மாவிடம்

"...ம்....

ம்ஹீம்..."

என பதில் மடுத்தேன்.,

உதடுகள் பிரியாது
வேறெதை சொல்வது

"ம்" மை தவிர்த்து.?.


நடுக்கும் குளிரில்,

கம்பளியாய் அணைத்துக்கொண்டிருக்கிறேன்..

உருகி, ஊடுருவி வரலாம்
உன் முதுகுப்புறம்..!.



தகிக்கும் வெப்பத்தை
குழைத்தெடுத்து,
நெற்றியில் ஒரு கண்ணாய் மாற்றிக்கொள்
எம்பெருமானே...


உரோமம் அடர்ந்த  உனது மார்பில்
யூகலிப்டஸ் தைலம் தேய்த்துவிடுகிறேன்..

நனைகிறது ஊசியிலை காடு..!.


நீ ஒன்னுமில்ல எனும் போது,
ஏதோ ஒன்று இருக்கிறது.

பரவால்ல எனும் போது,
பக்கத்தில் இருக்க சொல்கிறது.
ஒரே ஒரு கோரிக்கை தான் உன்னிடம்

பொய்கூட சொல்லிக்கோ,
உண்மையை மறைக்காதே..  ப்ளீஸ்...


நான், நான் தீர்ந்து

நீயாக இருக்கிறேன்..

என்னுள் இருக்கும் உன் நானுக்கு

உடல் சுகமில்லை.,

உன்னுள் இருக்கும் என் நானுக்கு

மனம் சுகமில்லை..

⚫⚫⚫

No comments:

Post a Comment