ஒரு கவிதையைப் போலவே இருந்துவிடட்டும்.
வெளிறிய அதரத்தில்
வேஸலின் தடவிக்கொள்ளலாம்.
வெண்ணிற ஒருசுருள் முடிக்கு
கண்மையால் முலாம் பூசலாம்.
மகிழ்ச்சியின் பூரிப்பு என்று
கன்னத்தைக் கிள்ளும் உறவினருக்கு,
கதுப்பேறிய கன்னங்களில்
குழிவிழ ஒரு புன்னகைத் தரலாம்.
அழற்சி, தலைவலி, அஜீரணம் என
உடலியல் உபாதைகளுக்குப் பெயர்வைக்கலாம்.
ஒரு அங்குலம் பெருத்த உதரத்தை மறைக்க,
நாடாவின் முடிச்சுகளை இறுகக் கட்டலாம்.
தள்ளிப்போன இந்நாட்கள்.
ரகஸியமான நாட்குறிப்பாகவே இருந்துவிடட்டும்.
இன்னும் பிரசுரிக்கப்படாத
ஒரு கவிதையைப் போலவே !.
No comments:
Post a Comment