Monday, June 13, 2016

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு




“வேரல்வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே!”

{பெரும் பலா எடை எவ்வாறு சிறு கிளை தாங்கும்;
என் சிறு இதயம் தாங்குமா உன் சிறு பிரிவெனும் பெரும் துயரம்.?}

(#கபிலர் - #குறுந்தொகை - 18)

*
உன்னை முதன்முதலில் சந்தித்ததொரு தினம்

உன்னிடம் முதன்முதலில் சிந்திய புன்னகை

உன்னிடம் முதன்முதலில் பேசிய சொற்கள்

உன்னிடம் முதன்முதலில் கைகோர்த்த நாள்

உன்னிடம் முதன்முதலில் கோபித்த மாலை

உன்னிடம் முதன்முதலில் ஸ்பரிசித்த கணம்

உன்னிடம் முதன்முதலில் தந்ததொரு முத்தம்

உன்னிடம் முதன்முதலில் நிகழ்த்தியதொரு ஊடல்

உன்னிடம் முதன்முதலில் எனை பார்த்த தருணம்

.

நிமிடத்திற்கு ஒரு நினைவை

நினைப்பதற்கு தந்திருக்கிறாய்..!

நீ இல்லா இந்நாட்களில்

நினைவை தின்று உயிர் வளர்க்கிறேன்..

**
சீப்பிலிருந்த தலைமுடியை

கைவிரலில் சுருட்டிக்கொண்டிருக்கிறேன்

சீப்பாக சில நினைவு சிடுக்கெடுக்கிறது

முடியாக சிலநினைவு விரல் சுருள்கிறது..!

***
ஒரு மனநோயாளியின் கனவில் நுழைய முற்படுகிறேன்,

சுவற்றில் தெரியும் அவள் காதலன் பிம்பத்தை முத்தமிடுகிறாள்.

அவன் சாயலொத்த சிறுவர்களை பார்த்து நாணுகிறாள்.,

கிழிந்த உடைகளை சரி செய்து மெதுவாய் பூரிக்கிறாள்.

தன் அழகுக்குஒப்பான பெண்களை பார்த்து சிடுக்கிக்கொள்கிறாள்,

தன் காதலன் முகத்தை

தான் நேசித்த பொழுதை

தான் பேசிய சொற்களை

தான் வாழ்ந்த காதலை

யாருக்கும் புரியாத நிரல் மொழியாய்

சுவற்றிலும் தரையிலும் கிறுக்குகிறாள்...
.
.
ஒருகொம்பை பார்த்ததும் அழத்துவங்குகிறாள்,

அதற்கான காரணம் அவளிடம் இருக்கக்கூடும்..
.
.
என் எதிர் இருக்கும் சுவரில் பிம்பமாய் சிரிக்கிறாய்

முத்தமிடவும்,

நாணவும்,

மௌனம் பூரிக்கவும்,

கிறுக்கவும்,

சிரிக்கவும்,

அழவும்,

என்னிடமும் காரணங்கள் இருக்கின்றது.!

No comments:

Post a Comment