Thursday, June 9, 2016

தலைவி கூற்று




!
ஒரு இரவில்
இரு கனவு காணுகிறோம்.
இரு கனவில் இரு நிலவு
ஒரு நாம்.!

!
நேற்றைய நாள் முடிவில்,
யார் முதலில் பேசுவார் பார்க்கலாம் என
"டூ" விட்டு பிரிந்து சென்றோம்.

நான் தோற்று,
நீ தோற்று,

இறுதியில்

நாம் ஜெயித்தோம்.!

!
உன்னை நான் சமாதானப்படுத்த
முதலில்
என்னை நான் சமாதானப்படுத்துகிறேன்.!

!
நிழல் நீண்டு விழும் மாலையில்,
காலாற கடற்கரை கடக்கிறோம்.

என் கைக்குள் புதைந்த உன் விரல்கள்,
வேர் விட்டு, செடியாய்
கொடியாய் விழுதாய்
விருட்சமாய் வளர்கிறது.

செக்கச்சிவந்து மாதுளம் பூவென
வெட்கப்பூ பூக்கிறேன்.!

!
வரவேற்பறை தெற்கு மூலையில்
களிமண் கூடுகட்டி குடிபுகும்
பிள்ளைக்குழவியின் ரீங்காரம் உன்னது.

உடைக்கக்கூடாதென அப்பாவுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.!

குளியலறை விதானத்தில்
வலைபின்னிக்காத்திருக்கும்,
கருஞ்சிலந்தியின் மின்னும் கண் உன்னது.

குளிப்பதற்கின்றி கூசி நிற்கிறேன்..!

!
"உனதெல்லாம் எனது"
இது அடிமைத்துவம் அல்லது சர்வாதிகாரம்.

"நான் தருவது மட்டும் உனது"
இது முதலாளித்துவம்.

"எனதெல்லாம் உனது"
இது சகோதரத்துவம்.

"இருப்பதெல்லாம் உனக்கும் எனக்குமானது"
இது கம்யூனிஸம்.

சொன்னவெல்லாம் சேர்த்தது

கா

ல்.............!!

No comments:

Post a Comment