கொன்றுவிடுவீர்கள் அவ்வளவு தானே.?
கந்தர்வனல்லன் அவன்.
சிறு சிராய்ப்புகளில் கூட இரத்தம்
வழியும் உடல் தான் அவனது.
துயிலுரித்து நிர்வாணப் படுத்துவீர்களா.?
அவளின் தாழ்ச் சீலையை உருவி, அம்மணமாக்குவீர்கள் இல்லையா.?
நீங்கள் பாதுகாக்கும்
நீங்கள் பத்திரப்படுத்தும்
உங்கள் சகோதரியின் தனங்கள் தான் அவளுக்கும்.
நீங்கள் பூஜிக்கத்தக்க உங்கள் தாயின்
புனித யோனி தான் அவளுக்கும்.
ஒன்றாய்த் தீயிட்டுக் கொளுத்துவீர்களானால்,
தேனடையென இருக்கும் தீக்காயத்தை,
பின்பனிக்காலத்தில் தேன் பிழிந்துத் தரலாம்
உங்கள் ஜாதிய நாவிற்கு .
கொல்வதும் நீங்கள் தான்.
கொல்லப்படுவதும் நீங்கள் தான்.
உங்கள் வீட்டுப் பால்கனியின்
பந்து விளையாடிக்கொண்டிருக்கும்
உங்கள் வீட்டுச் சிறுவன்தான் காதலிக்கப்போகிறான் .
அவனின் நீள அளவுகளுக்கு ஏற்ப
நிங்களே ஒரு தூக்குக் கயிற்றை தயாரித்துக்கொள்ளுங்கள்.
படுக்கையறையில் அயர்ந்துத் தூங்கிப்போன
உங்கள் குழந்தை தான் இனி காதலிக்கப்போகிறாள்.
கசப்பு மருந்தை தின்னமறுக்கும் உங்கள் செல்லத்திற்கு,
கசப்பு விசத்தை சர்க்கரை சேர்த்துப் பதப்படுத்துங்கள்.
இறந்தவனின் துயரத்தைப் பாடிக்கொண்டிருக்கும்
அவள் தான் நான்.
உங்கள் சமாதானத்தின் கத்தி
முதலில் என் கழுத்திலிறங்கட்டும் .
கோடை இடியைப் போல
ஆழமாக
வேகமாக
உங்களுக்கு என் சமாதானம் .!
No comments:
Post a Comment