உங்களோடு நானும் என்னோடு நீங்களும் உரையாடவும், புரிந்துகொள்ளவும் பொதுவில் மொழி ஒன்று இருக்கிறது. பின் எதற்கு இந்த கவிதைகள்.? கவிதைகள் உங்களுக்குள் என்ன நிகழ்த்துகிறது.?
அரைகுறையாகவோ, முழுமையாகவோ எல்லோரும்தான் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைப் பதிவு செய்ய விழைந்தால் அதில் என்ன இருக்கும்.?
துயர்மிகுந்த ஒரு கண்ணீர், எழில்மிகு இயற்கை, கொண்டாடத் தருணங்கள், கனவு, இறை பக்தி, இயலாமை, முற்றிய காமம், முதிராக் காதல், தனிமைப் பிரிவு, சூழ்ச்சி, வஞ்சகம், ஆற்றாமை, கோபம் இவ்வாறு உங்களுக்குள் நேர்ந்த தருணங்கள் தானே.?
ஆக நேர்தலே கவிதை.!
நேர்ந்த கணங்களை நேர்த்தியான மொழியில் சொல்வது தேர்ந்த கவிதை.
ஆக "நேர்தலே கவிதை"
வார்த்தைப் படிமங்களற்றவை மற்றும் நுட்பமான பன்மொழித்தன்மையானவை அல்லது இலக்கியச் செறிவான மரபுநடை கொண்டவை என கவிதைகள் மீதான நம் புரிதல் கற்றலுக்குத்தக்க மாறிக்கொண்டிருக்கிறது.
எனது முகநூல் நண்பர் "Rajamohamed Kanmani" அவர்கள் "பால்யகால சொர்க்கவெளி" மூலம் தனக்கு நேர்ந்த கணங்களை நேர்த்தியாக தந்திருக்கிறார்.
தொலைத்த பால்யம், மகள் நேசம், எள்ளலான ஒரு அறச்சீற்றம், நட்பு பாரட்டல், பிரிதலின் கணம், நகர்மயமாதல் என சமூக நோக்கில் கலவையாக தன்மொழியில் தான் பார்த்த, பாதித்த நிகழ்வுகளை தந்திருக்கிறார்.
மொத்தம் 46 கவிதைகள் கொண்ட கவிதைத்தொகுப்பு. வாழ்த்துரையில் கவிஞர் அறிவுமதி, கவிஞர் புவியரசு, கவிஞர் சினேகன், இயக்குனர் சேரன், இயக்குனர் பிருந்தா சாரதி, இயக்குனர் பேரரசு என பிரபலங்கள் அத்தனை பேரும் சிலாகித்த கவிதைகள் போக எனக்கும் ஒன்று இருக்கும்தானே.? அது உங்களுக்கும்.....!
#மச்சங்களுக்கு_கூச்சமில்லை.
மிகவும் குறும்பானவை..
எப்போதும்
பிறர் காண முடியாதபடியான
மறைவிடங்களையே
தேர்ந்தெடுக்கின்றன..
வகை வகையான
குறும்பு மச்சங்கள்..
இசையில் ஆர்வம் உள்ளவை
காதோரங்களில் வசிக்கின்றன..
"கமல்" மச்சங்கள்
உதடுகளில் வாழ்கின்றன..
சினிமா மச்சங்களுக்கு
தொப்புள் பிடிக்கிறது..
நட்பு பாராட்டுபவை
உள்ளங்கைகளில்
உறைகின்றன..
வேடிக்கை பார்க்க
விரும்புபவை
கண்களுள் குடியிருக்கின்றன
கண்டுபிடி பார்க்கலாம் என
காதலர்களுக்குள்
கண்ணாமூச்சி காட்டும்
சில மச்சங்கள்.!
எதிர்பால் உடம்பில்
மச்சம் தேடாத காதலர் உண்டா?
முதுகுப்புறம்,
புஜங்களின் உட்புறம்,
மார்புகளின் சரிவுகளில்,
முழங்காலுக்கு மேலே..
தொடைகளின்
வளமான வெளிகளில்..
இன்னும்
அடச்சீ..
மச்சங்களுக்குத்தான்
கூச்சம் இல்லை.;
உங்களுக்குமா
வெட்கம் கெட்டு வாசிக்கிறீர்கள்.!
😍😍😍😍
அவ்வளவுதான்.. படிக்கும்போது, தன் குறுகுறுப்பையும், புன்முறுவலையும் உங்களுக்கும் தந்திருக்கிறது அல்லவா..??
அவ்வளவு தான் கவிதை.!
மாலைத் தேனீருடன் என் அன்பு..!!
கவிதைத்தொகுப்பு : பால்யகால சொர்க்கவெளி
ஆசிரியர் : கண்மணி ராஜாமுகமது
பதிப்பகம் : இமேஜ் & இம்ப்ரெஷன் வெளியீடு
பக்கங்கள் : 88
விலை : 70
No comments:
Post a Comment