🔘
சக்தியற்ற சிவம் ஒரு சவம்.
🔘 🔘
வெறுமனே அமர்ந்திருக்கிறான் புத்தன்
யசோதரையின் கேள்விகளுக்கு
பதில் இல்லை அவனிடம்.
பானையின் கழுத்தைச் சீர் செய்யும் குயவனாக,
யசோதரையின் பிரியங்களின் மென் ஸ்பரிசங்கள் மீது
ஊர்ந்த புத்தனின் விரல்கள்,
ருத்ராக்ஷ்ங்களை உருட்டிக்கொண்டிருக்கிறது.
லயித்த விழிகளும், ருசித்த இதழ்களும்
மருண்டு சிறுத்து தரை தாள
மௌனித்திருக்கிறது.
ஸ்பரிசித்த சரீரம்,
முற்றி வெடித்த வனப்பெருமரமென வளர்ந்து,
வேர்பரப்பி அதன் சிறுகிளையொன்றில்
பெருந்தவம் புரிகிறான் புத்தன்.
அம்மணத்தைத்தவிர வேறெதும் மறைக்கவியலாத
காவித் துறவு ஆடையால்
முகந்தன்னை மறைத்து,
ஆசை பற்றிய தர்க்கங்களையும்,
இன்மை பற்றிய தரவுகளையும்,
போதிக்கிறான்..
யசோதரையின் கேள்விகளுக்கு பதில் இல்லை அவனிடம்.!
அருந்திய குருதியை
விருந்தாக்கிய சதையை
மருந்தாக்கிய காமத்தை...
அவள் தராத எதையும் அமைதி தரப்போவதில்லை..
யோனி வடிவச் சுடர்விளக்கை அணைத்து
இருட்டில் அமர்ந்திருக்கிறான் புத்தன்..
வெள்ளரசு கரங்களில் முளைக்க
சங்கமித்தை
சரணங்களை ஜெபித்துக்கொண்டிருக்கிறாள்..!
புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி.!
No comments:
Post a Comment