😈
உங்களுக்குள் ஒரு பிசாசைப் புகுத்தி,
ஊடூ (Voodu) பொம்மையின் கழுத்தைத் திருகுவதால்
உங்களுக்குள் ஒரு வதை ஏற்படுத்தமுடியும்.
ஆக,
பிசாசுகளை
பிசாசுகளென்றே
அறிமுகப்படுத்துகிறேன்.
பிசாசுகள் மொழியற்றவை,
மொழியற்ற பிசாசுகள்
இலையின் சலசலப்பொத்து குறவையிடுகின்றன.
மின்மினியின் ஒளிப்புள்ளிகளாய் அலையும் பிசாசுகள்,
வெளிச்சக்கீற்றில் புகையாய்ப் படர்கின்றன.
நிணம் எரியும் வாசம்கொண்ட
பிசாசுகளின் வருகையை
நாயறியும்.
நிராசையில் மாண்டுபோன ஒருத்தி,
தனது காதலனைத் தழுவுவவும்,
தனது மறுவருகையை தெரிவிக்கவும்,
முழுநிலா நாளில் உடன் சேர்ந்தால்
சாசுவதம் கிட்டும் என்றும்,
அதற்குத் தனக்கொரு உடல் வேண்டும் என்றும்,
கதையைத் துவக்குகிறேன்..
பிசாசு பற்றிய புனைவுக்கதைகள் கேட்டுத்தூங்கும் சிறுமியின்
விரல்களில் நகங்கள் வளரத்துவங்குகிறது.
வெண்மை நீர்த்து, விழியெங்கும் கருமை படர்கிறது.
சுவர் பற்றி விட்டத்தில் ஏறி நடக்கிறாள் அச்சிறுமி.
தேகத்தின் நகக்கீறல்களை
இசைக்குறியீடாக்கி தன் கனவில்
பண் ஒன்று இசைக்கிறாள்.
தாம் பார்த்த வனத்தை,
தாம் நனைத்த மழையை,
தாம் தம் ஊடலின் கதகதப்பை
கனவிற்குள் உணர்கிறாள்..
ஒரு பூனையைப்போல் மெதுவாய் நடந்து,
தாம் இருந்த மரக்கிளையையும்,
தாம் நடந்த நிழற்சாலையையும்,
தாம் சிரித்த பூங்காவையும்,
தாம் கடந்த கடற்கரையையும்,
சல்லடைகண்ணால் சலிக்கிறாள்.
பயணவழியெங்கும் தொலைந்த கொலுசைத் தேடும்
பாவச் சிறுமியாய் அலைகிறாள்.
வைகறையில் தேடலைக் கைவிட்டு
நாற்புறச்சுவற்றின் ஒரு மூலையில்
கரும்பொதியென சுருண்டு அழுகிறாள்..
விடியலுக்குள் அறியலாம்
எதிர்புறச் சுவற்றில்
சிறுவன் ரூப தன் காதலனை.!!
#பின்குறிப்பு : பிசாசு பற்றிய புனைகதைகளைக் கேட்டுத் தூங்கும் சிறுமியின் நகங்களை கத்தரிப்பது நல்லது.
No comments:
Post a Comment