☔
பேய் மழை பெய்து கொண்டிருக்கிறது.
ஒரு குடையில் ஒதுங்கி நிற்கிறோம்.
தேவதை மழை பெய்வதாக கூறுகிறாய்...
றெக்கைகள் முளைக்கிறது என் விலாப்புறம்....!!
☔
விட்டு விட்டுப்பெய்கிறது
விடாது பெய்கிறது
விடியல் வரை பெய்கிறது
மழை போல் உன் நினைவு..!
☔
உனக்கும் எனக்குமான
ஒற்றை முகவரி இட்ட கடிதத்தை
ஊரெல்லாம் அஞ்சல் செய்கிறது
இந்த மழை...!
☔
இந்த மழை நாள்
பின்வாசல் தாழ்வாரத்தில்
நாய்க்குட்டி போல்
சோம்பிக்கிடக்கிறது,
இன்னுமிருக்கிறது
முன் பனியும்
பின் பனியும்... 😜😜😜
☔
வெதுவெதுப்பான
தேனீர் கோப்பையை
உள்ளங்கையில் வைத்து
சூடேற்றிக்கொண்டிருக்கிறேன்...
சரி..,
நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்..??
☔
வள்ளுவன் சொன்ன
ஊடல் உவகையயும்
குறுந்தொகையின் தலைவிகூற்றையும்
பாரதியின் கண்ணன் பாட்டையும்
கதையாய் சொல்கிறது
மறைவாய் இந்த மழை..!
☔☔☔☔☔☔☔☔☔☔☔
No comments:
Post a Comment