Monday, June 13, 2016

💖💖💖 சம்மனசுகளின் இராக்கினி 💖💖💖





இந்த முன்னூற்றி அறுபத்தைந்து நாட்களாய்,

நீ தான் என்னுள் முற்றிலும் நிறைந்திருக்கிறாய்

காதலா..!

நீ ஏன் என்னை காதலிக்கவேண்டும்.?

நான் ஏன் உன்னை காதலிக்கவேண்டும்.?

காரணம் அறிவாயா காதலா.?

முன்பொரு ஜென்மத்தில்,

தம்பதியராய் கூடிவாழ்ந்த நாம்.

உனக்கு முன் நான் இறந்தும்,

பிறிதொரு நாளில் நீ இறந்தும்,

உன் தாய் வயிற்றில் நீயும்,

என் தாய் வயிற்றில் நானும்.

எனக்கு முன் நீயும்,
உனக்குப்பின் நானும்,
பிறந்திருக்கிறோம்.!

அன்று நீ என்னை அழைத்தது தேவகணம்,

சிலுவையிலிருந்து என்னை உயிர்ப்பித்து,

உள்ளங்கையில் அறையப்பட்ட
ஆணிகளை உருவி

மயூரத்தின் வண்ணப்பீலியால் தடவிய

உனது வார்த்தைகள் வரம்.!

யாரும் கேளாத என் புலம்பலுக்கு
செவிமடுத்தவன் நீ.!

எனது கவிதைகளை இசையமத்தவன் நீ.!

சுடுமணல் கடந்த இச்சிறு பாதங்களுக்கு,
முத்தஒத்தடம் உனது அன்பு.!

ப்ரியங்கூர் காதலா..

நீ.,

மீட்பன் - தேவகுமாரன்.!

நான்.,

சம்மனசுகளின் இராக்கினி.!

நாம்..

புதிதாய் பிறந்த குழந்தைகளின் தூய நிர்வாணம்..!

வாழ்வதெற்கென்றே துணிந்திருக்கிறோம்.

மண்ணாயினும் சரி.
விண்ணானாலும் சரி..!

உன்க்கு என் அன்பு.

அன்புக்கூறுவேன் இன்னும் அதிகமாய்..



ஆகவே,

    பிரியம் என்பது பித்துநிலை,

    ஆட்டிச சிறுமியின் திறந்த வாயில்

    எப்போதுமிருக்கும் புன்னகை.

    பைத்தியக்காரர்களின் பைத்தியம்.



உங்கள் காதலனையோ, இல்லை காதலியையோ,

    மேகங்களற்ற இரவில் நட்சத்திரங்களை இணைத்து,

    அரூப கோட்டோவியமாக மாற்றவியலுமெனில்,

    தழுவமுடியுமெனில், சுகிக்கமுடியுமெனில்,

    தனிமையின் அந்தரங்கமான பொழுதில்

    உமது விதானத்தில் வானிலையை

    மாற்றிக்கொள்ள ஏகுமெனில்,



நல்லது.



    நீங்கள் பிரியத்திற்கு பிரியப்பட்டிருக்கிறீர்கள்.!



ஆகவே,

    காதலென்பது கடவுளோடு பிராத்திப்பது.

    கைவிடப்பட்ட நாய்க்குட்டிக்கு,

    திரியில் பால் நனைத்து பருகத்தருவது..

    அப்பளத்தின் கொப்பளங்களாய் இருக்கும்

    உங்களது ரணம்பட்ட வாழ்வை பிதுக்கி

    துயரச்சீழை வெளியேற்றுவது,

    பின்னர், இரத்தம் வடிந்து தீர்ந்த பின்

    அப்புண்ணில் மார்பழுந்தக்கிடப்பது.



உங்கள் காதலனுக்கோ, இல்லை காதலிக்கோ,

    பாம்பு பின்னிய ஆப்பிள் கொடியிலிருந்து

    ஒரு கனியை கொய்து தருவதானால்,

    உங்கள் தலைமீது அழுத்தும்

    ஊழிச்சுமையை இன்னொருவருக்கு

    கைமாற்றிக்கொள்ளக்கூடுமெனில்



நல்லது.



    நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்..!



ஆகவே,

    நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்,



நல்லது.



உன் இடமார்பில் என் வலக்காலைஊன்றி



நிலம் அதிர வான்நோக்கிகத்திசொல்லுவேன்



உன்னை காதலிக்கிறேன் என்று..!

ஆரோகணம்



   
"ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே" - #ஆண்டாள்

·        
·        
முதல் பிரசவத்தில் உடனிருப்பாயானால்,

தலைகோதி, கைகளைப்பிடித்து
என் நெற்றியில் முத்தமிடுவாயானால்,

இந்நொடி நிகழ்த்துவோம் ஒரு கூடலை.!

நிறைமாத சூலியாகி,
கைகளில் வளையலடுக்கி,
பிறை நிலவென வளர்ந்த வயிற்றில்,
முத்தமிடுவாயானால்,

கால்களை நீவி,
விரல்களுக்கு சுளுக்கெடுப்பாயானால்,

ஈரக்கூந்தல் உலர்த்தி,
தூபப்புகையாய் மணப்பாயானால்,

ஜடை பின்னி சிருங்காரித்து,
மாசுபடாத என் உள்ளங்கையில்
மருதாணி கோலமிடுவாயானால்..

இவ்விரவு,

பாலைவன அரவங்களாய் பின்னிக்கிடப்போம்.

வா.!

சர்ப்பம் தீண்டி நீலம் பாரித்த கண்களுடன்
இறுதியாய் புன்னகைக்கையில்,
நீர் நிரம்பக்கண்ணுடன்  இதே புன்னகை தருவதானால்,

வலியுடன் கூடிய உதிர நாளில்
எனக்காய் நீ ஜெபிப்பாயானால்,

தேகம் முதிர்ந்து விழிவற்றிய பின்னாளில்,
மலமள்ளித்தொண்டு செய்வாயானால்,

இக்கணம் புணரலாம் நீ என்னை..!

காமமெது காதலா.?

டெஸ்டோஸ்ட்டெரொன் உறிஞ்சும்
டிராம்பூனில் உறைகிறது காமம்.

பிரசவ அறை இரத்த வீச்சத்திற்கு அலையும்
தெருக்கொழு நாயின் நாவில் சொட்டுவது காமம்.!

நாம் இறை.!

"நிலா முற்றம்"



வாட்டாத பறை போல பழுப்பு வர்ண வெண்ணிலா,
துருவத்தில் எழும் நிலவு வைரம் பதித்த மோதிரம்,
பட்டர் பார்த்த முழுநிலவு அபிராமி மூக்குத்தி,
யன்னல் வழி நான் பார்க்க சுடோகு கட்ட சுடர் நிலா,
ஸஹர் நேரம் காத்திருக்கும் ரமலானின் தொழுகை நிலா,
சிவனாரின் சிரம்மேலே பக்ரிதியாய் பிறை நிலா,
பால்யத்தில் பிள்ளை நிலா, யவ்வனத்தில் வளர் நிலா,
சந்திரனாய் ஆண்நிலா, மதியானால் பெண்நிலா,
நீ ஆண்நிலா, நான் நாணும் பெண்நிலா,
தித்திக்கும் திங்களில் தேனூறும் தேன்நிலா,
சலனக்குளத்தில் வளையமிடும் வெள்ளை நிலா,
கொன்னூர் துஞ்சும் யாமத்தில் கொல்லும் என்னை,
நிலா
திங்கள்
மதி
பிறை
நிலவு
வெண்ணிலா..!

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு




“வேரல்வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே!”

{பெரும் பலா எடை எவ்வாறு சிறு கிளை தாங்கும்;
என் சிறு இதயம் தாங்குமா உன் சிறு பிரிவெனும் பெரும் துயரம்.?}

(#கபிலர் - #குறுந்தொகை - 18)

*
உன்னை முதன்முதலில் சந்தித்ததொரு தினம்

உன்னிடம் முதன்முதலில் சிந்திய புன்னகை

உன்னிடம் முதன்முதலில் பேசிய சொற்கள்

உன்னிடம் முதன்முதலில் கைகோர்த்த நாள்

உன்னிடம் முதன்முதலில் கோபித்த மாலை

உன்னிடம் முதன்முதலில் ஸ்பரிசித்த கணம்

உன்னிடம் முதன்முதலில் தந்ததொரு முத்தம்

உன்னிடம் முதன்முதலில் நிகழ்த்தியதொரு ஊடல்

உன்னிடம் முதன்முதலில் எனை பார்த்த தருணம்

.

நிமிடத்திற்கு ஒரு நினைவை

நினைப்பதற்கு தந்திருக்கிறாய்..!

நீ இல்லா இந்நாட்களில்

நினைவை தின்று உயிர் வளர்க்கிறேன்..

**
சீப்பிலிருந்த தலைமுடியை

கைவிரலில் சுருட்டிக்கொண்டிருக்கிறேன்

சீப்பாக சில நினைவு சிடுக்கெடுக்கிறது

முடியாக சிலநினைவு விரல் சுருள்கிறது..!

***
ஒரு மனநோயாளியின் கனவில் நுழைய முற்படுகிறேன்,

சுவற்றில் தெரியும் அவள் காதலன் பிம்பத்தை முத்தமிடுகிறாள்.

அவன் சாயலொத்த சிறுவர்களை பார்த்து நாணுகிறாள்.,

கிழிந்த உடைகளை சரி செய்து மெதுவாய் பூரிக்கிறாள்.

தன் அழகுக்குஒப்பான பெண்களை பார்த்து சிடுக்கிக்கொள்கிறாள்,

தன் காதலன் முகத்தை

தான் நேசித்த பொழுதை

தான் பேசிய சொற்களை

தான் வாழ்ந்த காதலை

யாருக்கும் புரியாத நிரல் மொழியாய்

சுவற்றிலும் தரையிலும் கிறுக்குகிறாள்...
.
.
ஒருகொம்பை பார்த்ததும் அழத்துவங்குகிறாள்,

அதற்கான காரணம் அவளிடம் இருக்கக்கூடும்..
.
.
என் எதிர் இருக்கும் சுவரில் பிம்பமாய் சிரிக்கிறாய்

முத்தமிடவும்,

நாணவும்,

மௌனம் பூரிக்கவும்,

கிறுக்கவும்,

சிரிக்கவும்,

அழவும்,

என்னிடமும் காரணங்கள் இருக்கின்றது.!

The Taste Of Extreme



¿?
இப்படி இல்லாமல்
இப்படியும் இருக்கலாம் என்று
இப்படி இருக்கிறது இந்நாள்.

தூர நாளில் சாமி படத்தை துணியால் மூடி,
தூர இருந்து பிராத்திக்கிறேன்.

முதல் பிரசவம் பார்க்கும் செவிலியின்,
தொப்புள் கொடியறுக்கும் தருவாயில்,
கரங்களின் நடுக்கமாக ஏந்திக்கொண்டிருக்கிறேன்
இத்தேனீர் கோப்பையை.!

மொசைக் தரையில் உலர்ந்த காஃபியின் கறையாக
சிறு காயம்

தண்ணீர் ஒற்றி துடைத்தெடுக்கலாம் கறையை.

கண்ணீர் ஒற்றி துடைத்தெடுக்கிறேன் காயத்தை.!

அதீதத்தின் ருசி



¿?
ஒரு எல்நினோவிற்கு பின்னான விடியலில்,

நம்மை சூழ்ந்திருக்கிறதொரு வனம்.

பூக்களில்லா வனம்
பறவை இல்லா வனம்

வனத்தின் ஒரு தொங்கலில் நானிருக்கிறேன்.

மறுதுருவத்தில் நீ இருக்கிறாய்.

எனது கூப்பாடுகளை மரம் தின்று,
இலை கிரகித்து, ஒரு காயாகிறது.

உனது கூச்சல்களை செரித்து,
ஒரு கனியாகக்கூடும்!

வாளையுருவி வழிசெய்து
வனம் கடக்கிறேன்.

நீயும் கற்களையுரசி தீயுண்டாக்கி,
வனமழித்து, துருவித்துளாவி

சலித்துப்போய் திரும்பிக் கொண்டிருப்பாய்.

காடென்னை கைவிட்டுவிட்டதாகப் புலம்பிக்கொண்டிருப்பாய்..

நான் அவையங்களை பிய்த்துருட்டி,
காடெங்கும் கற்களாய் பரப்பி காத்திருக்கிறேன்
ஒரு அகலிகையாய்..!


*சொற்களால் ஆனவள் *




🔘

ஒரு சொல்லை அம்பாக்குகிறேன்.

ஒரு சொல்லை வில்லாக்குகிறேன்.

ஒரு சொல்லை எடுத்து

ஒரு சொல்லை வளைத்து,

ஒரு சொல்லை தொடுத்து,

ஒரு சொல்லால் உன்னை வீழ்த்துகிறேன்.

வீழ்ந்த உன் உடலிலிருந்து வழிகிறது

செந்நிறமான ஒரு சொல்.

🔘

சொற்களால் ஆனது என் இருப்பு

தேர்ந்த கவிஞனின் சொற்களைத்திருடி,
நான் என்னை வடிவமைக்கிறேன்..
ஒரு சொல்லை உருவினால்
மொத்தமாய் சரிந்து விழும்..!

மேடான ஒரு சொல்லை உருவி
பள்ளமான இடத்தில் இட்டு,
தார் சாலையைப்போல சமன் செய்கிறேன்
எனது இருப்பை.

அணில் ஆடு  இலை ஈசல்
இவற்றையெல்லாம் சித்திரங்களாய் செய்திருந்தேன்,
சொற்சித்திரங்களால் நிறைந்தது என் பால்யம்..!

மாசறக்கழுவிய யானையொத்த
சிறு மலையில் எழுதிப்பழகினேன்
எனது முதற்சொல்லை..

பால் பற்கள் விழுந்த இடத்தில்
முளைத்தது ஒரு சொல்..

பொன்னிற அந்தியில் வலியோடு
தொடைவழி தூமையாய்
வழிந்து ஒரு சொல்..

அப்போதிருந்து,

தனித்த உயிர் சொல் நான்.

மெய் சொல்லை கண்டு அஞ்சும்
தனித்த உயிர் சொல் நான்.

ஆதிக்கம் காட்டி ஆபாசம் நீட்டி,
மெய்யாக மெய் வேண்டி நிற்கிறது
மெய் சொற்கள்.

அன்றிலிருந்து,
சொற்களை உதறி ஊமையானேன்..

சிறுதவமுனியென குகையினிலேறி
பெருந்தவம் புரிந்தேன்..

கொடுவனம் கடந்து, லிபியற்ற சிறுவனாய்
இதயவடிவ கல்லை என்னிடம் நீட்டுகிறாய்.

இப்போது,

இதயத்தில் முளைக்கிறது ஒரு சொல்.!

🔘

"பின் தொடரும் நிழலில் குரல்" 2



😈
உங்களுக்குள் ஒரு பிசாசைப் புகுத்தி,
ஊடூ (Voodu) பொம்மையின் கழுத்தைத் திருகுவதால்
உங்களுக்குள் ஒரு வதை ஏற்படுத்தமுடியும்.

ஆக,

பிசாசுகளை
பிசாசுகளென்றே
அறிமுகப்படுத்துகிறேன்.


பிசாசுகள் மொழியற்றவை,
மொழியற்ற பிசாசுகள்
இலையின் சலசலப்பொத்து குறவையிடுகின்றன.

மின்மினியின் ஒளிப்புள்ளிகளாய் அலையும் பிசாசுகள்,
வெளிச்சக்கீற்றில் புகையாய்ப் படர்கின்றன.

நிணம் எரியும் வாசம்கொண்ட
பிசாசுகளின் வருகையை
நாயறியும்.

நிராசையில் மாண்டுபோன ஒருத்தி,
தனது காதலனைத் தழுவுவவும்,
தனது மறுவருகையை தெரிவிக்கவும்,
முழுநிலா நாளில் உடன் சேர்ந்தால்
சாசுவதம் கிட்டும் என்றும்,
அதற்குத் தனக்கொரு உடல் வேண்டும் என்றும்,

கதையைத் துவக்குகிறேன்..

பிசாசு பற்றிய புனைவுக்கதைகள் கேட்டுத்தூங்கும் சிறுமியின்
விரல்களில் நகங்கள் வளரத்துவங்குகிறது.

வெண்மை நீர்த்து, விழியெங்கும் கருமை படர்கிறது.

சுவர் பற்றி விட்டத்தில் ஏறி நடக்கிறாள் அச்சிறுமி.

தேகத்தின் நகக்கீறல்களை
இசைக்குறியீடாக்கி தன் கனவில்
பண் ஒன்று இசைக்கிறாள்.

தாம் பார்த்த வனத்தை,
தாம் நனைத்த மழையை,
தாம் தம் ஊடலின் கதகதப்பை
கனவிற்குள் உணர்கிறாள்..

ஒரு பூனையைப்போல் மெதுவாய் நடந்து,

தாம் இருந்த மரக்கிளையையும்,
தாம் நடந்த நிழற்சாலையையும்,
தாம் சிரித்த பூங்காவையும்,
தாம் கடந்த கடற்கரையையும்,
சல்லடைகண்ணால் சலிக்கிறாள்.

பயணவழியெங்கும் தொலைந்த கொலுசைத் தேடும்
பாவச் சிறுமியாய் அலைகிறாள்.

வைகறையில் தேடலைக் கைவிட்டு
நாற்புறச்சுவற்றின் ஒரு மூலையில்
கரும்பொதியென சுருண்டு அழுகிறாள்..

விடியலுக்குள் அறியலாம்
எதிர்புறச் சுவற்றில்

சிறுவன் ரூப தன் காதலனை.!!



#பின்குறிப்பு : பிசாசு பற்றிய புனைகதைகளைக் கேட்டுத் தூங்கும் சிறுமியின் நகங்களை கத்தரிப்பது நல்லது.

"பின் தொடரும் நிழலில் குரல்" 1




😈
என் சாயலொத்த

என் பெயர்கொண்ட

என் வயதுடைய

ஒருத்தியின் மரணத்திலிருந்து,

ஒருத்தியாகவே உணர்கிறேன்

என்னை.!

தன்னிறக்கம் கொண்டு

இயலாமையின் துக்கம் தாளமல்

மலையுச்சியிலிருந்து குதித்து இறந்ததாகவும்,

தேற்றஆளற்று சொக்கப்பனைமரமாய்

மொட்டை வெளியில்

நின்றுகொண்டு எரிந்ததாகவும்,

பார்த்தவர்கள் சொல்லிக்கொண்டர்கள்.

முயல்குட்டி போன்ற அவள் வெதுவெதுப்பான கன்னங்களை

கைகளில் ஏந்தி,

சாபமேற்று உறைந்த அவள் ஊனில்

உனது ஆசுவாசத்தை தந்திருப்பாயானால்

அவள் இறப்பைத் தடுத்திருக்கலாம்

நீ....

நான்,

எனது இயலாமையையும்,

தேற்றலற்ற தனிமையயும்

பல்லின் இடுக்கில் புதைத்துவைத்துச் சிரிக்கிறேன்.

இப்போதெல்லாம்,

அப்பாவின் ஏசல்கள் காதில் விழுவதில்லை.

அம்மாவோ இன்னொருத்தியின்

புகைப்படத்தைப் பார்த்து

புலம்பிக்கொண்டிருக்கிறாள்

இன்றிலிருந்து பதினாறாம் நாளில்,

நீயும் ஒப்புக்கொள்வாய்..

உன்னைச் சுற்றி ஒருத்தி நடமாடுவதாய்...!!

😈

சாக்தம்



🔘
சக்தியற்ற சிவம் ஒரு சவம்.

🔘 🔘
வெறுமனே அமர்ந்திருக்கிறான் புத்தன்
யசோதரையின் கேள்விகளுக்கு
பதில் இல்லை அவனிடம்.

பானையின் கழுத்தைச் சீர் செய்யும் குயவனாக,
யசோதரையின் பிரியங்களின் மென் ஸ்பரிசங்கள் மீது
ஊர்ந்த புத்தனின் விரல்கள்,
ருத்ராக்ஷ்ங்களை உருட்டிக்கொண்டிருக்கிறது.

லயித்த விழிகளும், ருசித்த இதழ்களும்
மருண்டு சிறுத்து தரை தாள
மௌனித்திருக்கிறது.

ஸ்பரிசித்த சரீரம்,
முற்றி வெடித்த வனப்பெருமரமென வளர்ந்து,
வேர்பரப்பி அதன் சிறுகிளையொன்றில்
பெருந்தவம் புரிகிறான் புத்தன்.

அம்மணத்தைத்தவிர வேறெதும் மறைக்கவியலாத
காவித் துறவு ஆடையால்
முகந்தன்னை மறைத்து,

ஆசை பற்றிய தர்க்கங்களையும்,
இன்மை பற்றிய தரவுகளையும்,
போதிக்கிறான்..

யசோதரையின் கேள்விகளுக்கு பதில் இல்லை அவனிடம்.!

அருந்திய குருதியை
விருந்தாக்கிய சதையை
மருந்தாக்கிய காமத்தை...

அவள் தராத எதையும் அமைதி தரப்போவதில்லை..

யோனி வடிவச் சுடர்விளக்கை அணைத்து
இருட்டில் அமர்ந்திருக்கிறான் புத்தன்..

வெள்ளரசு கரங்களில் முளைக்க
சங்கமித்தை
சரணங்களை ஜெபித்துக்கொண்டிருக்கிறாள்..!

புத்தம் சரணம் கச்சாமி

தர்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி.!

ஆகவே...,


நம்பிக்கையைப்போல
அத்தனை ஸ்திரமானது
நம்பிக்கையின்மையும்.

நம்பிக்கையின்மை
நீங்கள் பருகும் தேனீரில்
நஞ்சைக் கலக்கிறது.

நம்பிக்கையின்மை
உங்கள் முதுகிற்குப் பின்னால்
அணைத்துக்கொண்டிருக்கும்
கரங்களில் ஒரு விஷ அம்பைத் தருகிறது.

விஷேசம் என்னவெனில்,
நம்பிக்கையைப் போலிருக்கிறது
நம்பிக்கையின்மையும்.

செவ்வரளிப் பூச்சூடி.!




ஒரு கவிதையைப் போலவே இருந்துவிடட்டும்.

வெளிறிய அதரத்தில்
வேஸலின் தடவிக்கொள்ளலாம்.

வெண்ணிற ஒருசுருள் முடிக்கு
கண்மையால் முலாம் பூசலாம்.

மகிழ்ச்சியின் பூரிப்பு என்று
கன்னத்தைக் கிள்ளும் உறவினருக்கு,
கதுப்பேறிய கன்னங்களில்
குழிவிழ ஒரு புன்னகைத் தரலாம்.

அழற்சி, தலைவலி, அஜீரணம் என
உடலியல் உபாதைகளுக்குப் பெயர்வைக்கலாம்.

ஒரு அங்குலம் பெருத்த உதரத்தை மறைக்க,
நாடாவின் முடிச்சுகளை இறுகக் கட்டலாம்.

தள்ளிப்போன இந்நாட்கள்.
ரகஸியமான நாட்குறிப்பாகவே இருந்துவிடட்டும்.

இன்னும் பிரசுரிக்கப்படாத
ஒரு கவிதையைப் போலவே !.

ஆகவே...


கொன்றுவிடுவீர்கள் அவ்வளவு தானே.?
கந்தர்வனல்லன் அவன்.
சிறு சிராய்ப்புகளில் கூட இரத்தம்
வழியும் உடல் தான் அவனது.

துயிலுரித்து நிர்வாணப் படுத்துவீர்களா.?
அவளின் தாழ்ச் சீலையை உருவி, அம்மணமாக்குவீர்கள் இல்லையா.?
நீங்கள் பாதுகாக்கும்
நீங்கள் பத்திரப்படுத்தும்
உங்கள் சகோதரியின் தனங்கள் தான் அவளுக்கும்.

நீங்கள் பூஜிக்கத்தக்க உங்கள் தாயின்
புனித யோனி தான் அவளுக்கும்.

ஒன்றாய்த் தீயிட்டுக் கொளுத்துவீர்களானால்,
தேனடையென இருக்கும் தீக்காயத்தை,
பின்பனிக்காலத்தில் தேன் பிழிந்துத் தரலாம்
உங்கள் ஜாதிய நாவிற்கு .

கொல்வதும் நீங்கள் தான்.
கொல்லப்படுவதும் நீங்கள் தான்.

உங்கள் வீட்டுப் பால்கனியின்
பந்து விளையாடிக்கொண்டிருக்கும்
உங்கள் வீட்டுச் சிறுவன்தான் காதலிக்கப்போகிறான் .
அவனின் நீள அளவுகளுக்கு ஏற்ப
நிங்களே ஒரு தூக்குக் கயிற்றை தயாரித்துக்கொள்ளுங்கள்.

படுக்கையறையில் அயர்ந்துத் தூங்கிப்போன
உங்கள் குழந்தை தான் இனி காதலிக்கப்போகிறாள்.
கசப்பு மருந்தை தின்னமறுக்கும் உங்கள் செல்லத்திற்கு,
கசப்பு விசத்தை சர்க்கரை சேர்த்துப் பதப்படுத்துங்கள்.

இறந்தவனின் துயரத்தைப் பாடிக்கொண்டிருக்கும்
அவள் தான் நான்.

உங்கள் சமாதானத்தின் கத்தி
முதலில் என் கழுத்திலிறங்கட்டும் .

கோடை இடியைப் போல

ஆழமாக

வேகமாக

உங்களுக்கு என்  சமாதானம் .!

!...இசைக்கடவுள்..!




மரகத வீணையென மடியிலமர்த்தி,
நரம்புகளை ஸ்வரக்கம்பிகளாக்கி,
அம்ருதவர்ஷினி ராகமிசைத்து,
மழை தருவிக்கிறாய்
வருணனென.

அகண்ட தொடையை
தட்டிச் சுரம் சேர்த்து,
உடும்புத் தோல் போர்த்திய
கனகதப்படையென காதலிசைத்து,
என் நீள் துயிலை நீ கலைத்தது
அடாணா ராகம்.

விரல்பத்தில் இதழ் பதித்து,
ஹார்மோன்கள் கதகளியாட,
ஹார்மோனியமாய் நீ இசைத்தது,
இரவின் தணுப்பேற்றும்
மோகச் செஞ்சுருட்டி.

காதுமடலை விரலால் சுண்டி,
கீதம் பாடிக் கிண்கிணியாட
நான் கண்ணயர நீ காதலிசைத்தது
நீலாம்பரி.

இதழை மூடி இதழைத்திறந்து
கட்டைவிரலை வாயிற்கவ்வி,
பொல்லாக் கண்ணனாய்
குழலென இசைத்தது
புலரும் பொழுதில்
பூக்கள் எழுப்பும்
பூபாளம்.

இசை காதலின் பேறுரு..

நான், நீ மீட்டும் ஸ்வரம்.

நீ இசைக்கடவுள்.!

🌝 நிசி அகவல் 🌝



🌝
இரவுதூங்க விழித்திருப்போம்.

🌝
நூலகத்தின் அமைதிகாக்கிறாய்.
புத்தகமாய்ப் புரட்டு.

🌝
பகலென்பது போலிப்பூச்சு,

இமைகளை அடை.

இருண்மை என்பது இரவு.

🌝
தூக்கம் மை கலைக்கவா தூங்கிப் போவது.?

🌝
கொணர்ந்து போ.

இல்லை.

கூடுபாய்.

இனி எனக்குத் தேவையில்லை
இறப்பைப் போலொரு தூக்கம்.

🌝
இடிக்குங் கேளீர் யாருமில்லை.
கொன்னூரும் தூங்கியாச்சு.
யாமம் தேய நள்ளெனும் சேவல்.
நித்திரைவிடுத்து, இப்புறம் வா.!

Friday, June 10, 2016

😬 காதல் நலக் கூட்டணி 😬



😬
உனது ஆட்சியில் பங்கு கேட்கிறேன்,
சம்மதமென்றால் சந்திப்போம் ஒரு தேர்தலை..

😬
தணிக்கையை மீறி,
இரவிலும் பிரச்சாரம் செய்கிறாய்.

இலவசங்களாய்,
முத்தப்பட்டுவாடா செய்கிறாய்..

நீ..
தேர்தல் விதிமுறைகளை
மீறிக் கொண்டிருக்கிறாய்.!

😬
ஸ்டிக்கர் பொட்டிலும்
உனது பிம்பம் பொறித்து,

ஸ்டிக்கர் ஆட்சி நடத்துகிறாய்.!

😬
தேர்தல் காலத்து விளம்பரச் சுவராய்,

மனசெங்கும் உந்தன் பிம்பம்.

😬
கலவரம் செய்து ஆட்சியைக் கலைத்து,
என் இடைத்தேர்தலில்
நின்று ஜெயித்த வேட்பாளன் நீ..!

😬
எனது எல்லாத் தொகுதிகளிலும்

போட்டிகளின்றி நீயே ஜெயிக்கிறாய்.!

😬
சுமுகமாய் தொகுதிப் பங்கிட்ட
காதல் நலக் கூட்டணி நாம்.!

😍 மெண்டல் மனதில்.!




😍

கேண்டி க்ரஷ்ஸின் காய்களை
நகர்த்திக் கொண்டிருக்கிறாய்.

"கனி இருப்ப" எனும் குறளைக்
காதில் சொல்கிறேன்..! 😍

😍

"லப்"க்கும் " டப்"க்கும்
இடையிலான நிசப்தத்தில்

நீ துடிக்கிறாய்.!

😍

வாசலை மறைத்துக் கொண்டு,

வழிமறித்து நிற்கிறாய்.

கைகளைத் தட்டிவிட்டுச் செல்லலாம் தான்.,

ஆனாலும்,

சட்டையை உலுக்கி,

சண்டையிடத் தோனுது மனஸு..! 😍

😍

என்னடா ஆம்பள நீ.??

புடவை கட்டத் தெரியாதென்கிறாய்..! 😜

🔘🔘🔘 குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா




🔘🔘🔘
சந்திர வதனம் ஒற்றைக் கொங்கை

சூரியப்பிரிகை வளைய வானவில்

நிசி மிளிர் விண்மீன் திரள்

பனி மழை வெய்யில்

வெக்கை இரவு, பசிய பகல்

நாம் சேர்ந்து ஒரு நாள்.


🔘🔘🔘
தன் பைத்தியத்தை

தன் கிரணத்தால்

தண் அலைகளுக்குத்

தன் பேய்ப் பிடிக்கச்செய்யும்

தண் நிலா தான் நீ.

தண் கடல் தான்  நான்..!



🔘🔘🔘
சலனக் கடலில்

சலனமற்று

சயனித்திருக்கிறாய்.


சயனமற்று

சலனித்திருக்கிறேன்

சலன இரவில்.!

💡 பொன் மாலைப் பொழுது 💡



💡
பூட்டிய கதவைத் தட்டி நிற்கிறேன்,

கதவைத் திற, காதல் வரட்டும்.!


💡
ஒரு தேனீர் வாங்கி,
இருவரும் அருந்தும் போது,
தம்ளரின் எல்லா விளிம்புகளையும்
ஈரம் செய்பவன் நீ..

💡
கொசுவைத் தவிர யாருமில்லை,

இரவெல்லாம் பேசலாம் வா.!

💡
ஒற்றை கூல்ட்ரிங்ஸில்,
இரட்டை ஸ்ட்ரா இட்டு,
இருவரும் பருகும்போது,
உன் வழியாக உறிஞ்சி எடுக்கிறாய்
என்னை.!

💡
பிறந்தநாள் மெழுகுவர்த்தியாய்
ஊதி அணை என்னை.!

💡
மாலைதீரப் பேசியபின்னும்,

அப்புறம் என்ன? என்கிறாய்.

எப்புறமும் யாருமில்லை

அப்புறமென்ன அப்புறம்.?!


💡
இரு இரு இரு..

நிலா நம்மைப் பார்க்கிறது.!

💡
உன் அசுர மொக்கைகளை
பொறுத்துக்கொள்ள முடியாதபோது,
இந்த பெட்டர்மாட்ஸ் லைட்டே தான் வேணுமா.?

என,

எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன்.!

💡
நீ என் இமய வரம்பன்.! 😉

🔘🔘 முப்பொழுதும் உன் முத்தங்கள் 🔘🔘



🔘🔘
தற்சமயம் தருவதற்கு
எப்பொருளும் இல்லை
முத்தங்கள் தவிர.

🔘🔘
ஊடலுக்குப் பின்னான
இறுதி முத்தத்தை
கவிதை என்கிறாய்.
இசை என்கிறேன் நான்.!

🔘🔘
முத்தம் கேட்டால்,
மௌனித்து நிற்கிறேன்..
மௌனத்தை சம்மதமாக்கி
கொடுத்துத் தொலை..
இல்லை,
எடுத்துத் தொலை..!

🔘🔘

🔘🔘 கவிதைக்குள்_கவிதை 🔘🔘



🔘🔘

உன் பெயர்க்கொண்ட குழந்தைகளை

இறக்கிவிடத்தான் மனமே இல்லை

என் இடுப்பிலிருந்து.!


🔘🔘

நிகழாத தப்பில்

தவறேதும் இல்லை..

சாமிக்குத்தான் ரத்தம்

மனுஷாளுக்கு எலும்பும் கறியும்தான்.

🔘🔘

அருகில் இருந்தும்

தொலையும் என்னை

தேடித்தருகிறாய்.

மீண்டும் தொலைகிறேன்

மீட்டெடு என்னை.

🔘🔘

வெய்யிலை இலையும்

மரத்தை நிழலும் தாங்குகிறது.

மரம் தான் நான்..

நீ தான் நிழலும் வெயிலும்..


🔘🔘

நான் எழுதி நீ ரசிப்பதுதான்

கவிதைக்குள் கவிதை.!

🔘🔘

🔘 தந்தையுமானவன் 🔘


🔘🔘

நேரா பார்த்து நட

என கண்டிக்கும் அம்மாவுக்குத் தெரியாது.

என் நேர் பின்னால் திரும்பி

திரும்பித் திரும்பிப்

பார்த்து நடக்கும் உன்னை..!


🔘🔘

சொல்லு என சொன்னாலும்,

சொல்லுடா என அதட்டினாலும்,

சொல்லூ…டா..  எனக் கெஞ்சினாலும்

சொல்வதில்லை.

சரி சொல்ல வேணாம் போ.

என சொல்லும் போது

கேளு

கேளேன்

கேளும்மா என சொல்கிறாய்

இது என் முறை ..

சரி இப்ப சொல்லு..!! 😜

🔘🔘

ஒன்று சேர்ந்து படிக்க

ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்

கதவைப் பூட்டி

கடிதம் பிரி.


🔘🔘

கன்னத்தில் ஊரும் எறும்பைப் பார்த்து

அதுவும் உன்னைக் காதலிக்கிறதென்கிறாய்.

சே,

இதெல்லாம்

கவிஞனின் கண்ணில் மட்டும்தான்

பட்டுத் தொலைகிறது.!

🔘🔘

மார்பை மிதித்து நிற்கிறேன்.

நிழல் தருகிறாய்.!

🔘🔘

அப்படித்தான் இருக்கிறது

ஒரு கோவில் திருவிழாவில்
தோளில் தூக்கித் தேரை காண்பிக்க,

பண்டிகை நாளின் இரவுவரை
இனிப்பிற்கு காத்திருக்க,

பிறந்தநாளுக்குப் புதுத்துணி வாங்கிவர,

பாதுகாப்பாய் அழைத்துவர,

தூங்க ஒரு கதை சொல்ல,

அப்பாவுக்குப் பின்னும்
நீ வந்த பின்னும்

அப்படித்தான் இருக்கிறது.!

Thursday, June 9, 2016

❤ சண்டியர் ❤






நான் மட்டும் நீயாய் இருந்தால்
என்னை இத்தனை தூரம்
ஏங்கவிட்டிருக்க மாட்டேன்.



வியர்வையாய் ஊறிக்கொண்டிருக்கிறாய்.
முந்தானையால் துடைத்துக் கொண்டிருக்கிறேன்.!



தோற்பது போலத் தோன்றினால்,
ஆட்டத்தைக் கலைத்துவிட்டு
ஆரம்பத்திலிருந்துத் துவங்குகிறான்
எல்லா விளையாட்டுகளையும்.!



குளியலைறையின் சோப்புவாசமாக,
நிரந்தரமாகத் தங்கிவிட்டாய்.

விபத்தில் இறந்தால்
கடைசி ஓர்மைகள்
உன்னதாக இருக்கும்.!



ஹாஸ்யக் கதைசொல்லி சிரிக்கவைத்தால்,

கமலஹாஸ்யக் கதைசொல்லி காதலேற்றுகிறாய்
சகலகலா வல்லவனே.!

🔘 களிப்பாடல் 🔘



🔘

எதை செய்யாதே என கண்டித்தாலும்,
அதையே செய்கிறாய்.
ஒரு சேட்டைக்காரக் குழந்தையைப்போல,

சரி,

சுற்றுமுற்றும் யாருமில்லை.
கொஞ்ச நேரம் சும்மாயிரு.!

🔘

ஈரமாக்கி உலரவைக்கிறாய்.

கன்னத்தை இதழால்.

இதழை கன்னத்தால்.

🔘

சந்தேகத் தீமூட்டி
சீதையை எரித்த
ராமனல்லவே நீ.

அலைமகளை இடம் அமர்த்தி
மீராவைக் காக்கவைத்து,

யதுகுலக் கன்னியரை
மாயத்தால் மோகித்து,
மோகத்தால் மூர்ச்சையாக்கும்
ஆநிரை மேய்க்கும் கண்ணனல்ல நீ.

நீ செங்காட்டுச் சுடலை

நான் வனப் பேச்சி

செம்மண் புழுதிதோயக்
களி செய்வோம் வா.!.

❤ இவன் மேகரூபன் ❤


❤❤❤
ஏங்க என்று அழைக்க

ஏங்கிப் போயிருக்கிறேன்.!



உன் கண்களில்தான் போதை என்றேன்,

என் இதழ்களில்தான் போதை என்றாய்,

மதுவிலக்கைத் தடைசெய்யவேண்டும்

தமிழ்நாட்டில்.!



நீ கவியானால்

நான் கவிதை.

நான் கவியானால்

நீ கவிதைத் தொகுப்பு.!




என் நிழல் உன்மேல் விழுவது

சூரிய கிரகணம்.

உன் நிழல் என்மேல் விழுவது

சந்திரகிரகணம்.




திருடியபோது சிக்காமல்

திரும்ப வைக்கும்போது சிக்கிக்கொண்டான்

முத்தத்திருடன்.!



கையை வைத்துக்கொண்டு சும்மா இரு

எனும்போதெல்லாம்,

உன்னை வைத்துக்கொண்டு சும்மாஇருப்பதெப்படி.?

என்பதையே பதிலாய்த் தருகின்றான்.!



புள்ளிக் கோலம் போடுகையில்

கிள்ளிக் கோலம் போடுகிறான்.!



நாணம் கொண்டு எதை எதையோமறைத்தாலும்

காட்டிக்கொடுத்துவிடும் இந்தக்கண்களைத்தான்

மறைக்க முடிவதில்லை..



களவு கற்பித்து

திருடியென்று பட்டம்சூட்டுகிறான்

திருடன்.!



தோழியர் மத்தியில்
ஸ்ரீ ராமன் என்று அறிமுகப் படுத்துகிறேன்

துச்சாதனனை.!



நீயின்றி எனை நனைத்த மழைநாளில்,
நானுணர்ந்தேன்

நீ மேகரூபன்.!!

❤❤❤❤❤❤❤❤❤

# தலைப்பில்லாதவை.




1

புத்தாண்டுப் பரிசு

பிடித்திருந்தால்
வைத்துக்கொள்.

பிடிக்காதென்றால்
திருப்பிக் கொடு.!

#கண்டிஷன்ஸ்_அப்ளை

2

தரவும் பெறவும் தான்
இதழும் கரமும்.

#தத்துவமுங்க

3

கேட்டுத் தருவது
யாசகம் என்றும்;
கேட்காமல் தருவது
கடமையென்றும் அறிக.!

#கமலிஸம்

4

வாயால் தான்
சேலை நெய்கிறது
பட்டுப்புழுவும்.!

#எசப்_பாட்டுதேன்

5

எண்ணங்களை மறந்து
முதல் எண்ணிலிருந்து
துவங்கும் இருவருக்கும்
செலக்டிவ் அம்னீசியா

#கோட்ட_அழி

6

இது பேருந்து தான்
என் கன்னம் ஒன்றும்
பொது இடமன்று.!

#சமூகத்துக்கு

7

வெட்கம் ஒன்றும்
சும்மா வருவதில்லை..

#ஆங்ங்..

8

கேள்வியொன்றைத்தா..
பதிலொன்றைத்தருகிறேன்..

#எக்ஸாம்_ஃபீவர்

9

வெப்பத்தால் தாழ்வுநிலை உருவாகும்,
தாழ்வுநிலை தீவிரமடைந்து
தாழ்வழுத்த மண்டலம் ஏற்படும்.

தாழ்வழுத்த மண்டலங்களில்
மழை பெய்வது இயற்கை தானே.!

#வானிலை_அறிக்கை

10

பூமிலிருந்தபடியே கண்டுபிடித்தோம்.
செவ்வாயில் நீர்.!

#வில்லேஜ்_விஞ்ஞானீஸ்

11

இதழிலிருந்து வரையத்துவங்கு
என் ஓவியத்தை.!

#தி_ஆர்டிஸ்ட்

12

ரப்பர் காலணிகள் தான்
மின்சாரம் தாங்கிக்கொள்ளுமாம்.!

#செருப்பூ_வெளம்பரம்

13

காதலனென்பதை
காட்டிக்கொடுக்கிறாய்
காண்பவரிடத்திலெல்லாம்.

யூதாசு காட்டிக் கொடுத்ததைப்போல..!

#ஆமென்

14

முற்றுப்புள்ளியில் முடியும்
இந்த கவிதைக்கு
என்ன தலைப்பிடலாம்.?

#ஏப்ரல்_14

😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

தலைவி கூற்று




!
ஒரு இரவில்
இரு கனவு காணுகிறோம்.
இரு கனவில் இரு நிலவு
ஒரு நாம்.!

!
நேற்றைய நாள் முடிவில்,
யார் முதலில் பேசுவார் பார்க்கலாம் என
"டூ" விட்டு பிரிந்து சென்றோம்.

நான் தோற்று,
நீ தோற்று,

இறுதியில்

நாம் ஜெயித்தோம்.!

!
உன்னை நான் சமாதானப்படுத்த
முதலில்
என்னை நான் சமாதானப்படுத்துகிறேன்.!

!
நிழல் நீண்டு விழும் மாலையில்,
காலாற கடற்கரை கடக்கிறோம்.

என் கைக்குள் புதைந்த உன் விரல்கள்,
வேர் விட்டு, செடியாய்
கொடியாய் விழுதாய்
விருட்சமாய் வளர்கிறது.

செக்கச்சிவந்து மாதுளம் பூவென
வெட்கப்பூ பூக்கிறேன்.!

!
வரவேற்பறை தெற்கு மூலையில்
களிமண் கூடுகட்டி குடிபுகும்
பிள்ளைக்குழவியின் ரீங்காரம் உன்னது.

உடைக்கக்கூடாதென அப்பாவுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.!

குளியலறை விதானத்தில்
வலைபின்னிக்காத்திருக்கும்,
கருஞ்சிலந்தியின் மின்னும் கண் உன்னது.

குளிப்பதற்கின்றி கூசி நிற்கிறேன்..!

!
"உனதெல்லாம் எனது"
இது அடிமைத்துவம் அல்லது சர்வாதிகாரம்.

"நான் தருவது மட்டும் உனது"
இது முதலாளித்துவம்.

"எனதெல்லாம் உனது"
இது சகோதரத்துவம்.

"இருப்பதெல்லாம் உனக்கும் எனக்குமானது"
இது கம்யூனிஸம்.

சொன்னவெல்லாம் சேர்த்தது

கா

ல்.............!!

""ஹே லவ் யூ சொல்லுடா லூஸு..""




😝
என்னிடம் காதல் சொல்ல உனக்கு
இருபத்தெட்டு வருடம் தேவைப்பட்டிருக்கிறது.!?

நான் மட்டும் நீயாய் இருந்தால்,
பேசத்துவங்கும் போதே சொல்லியிருப்பேன்..!

#நீ வேஸ்ட்டு டா...

😉
ஆரம்பத்தில்,

"ஹே லவ் யூ சொல்லுடா லூஸு.."

என்று ஏடாகூடமாகக் கத்திவிடுவேன் எனப் பயந்துதான்
உன் கண்களைத் தவிர்த்துவந்தேன்..!

😬
ஒரு குறுஞ்செய்தியில் சொல்லி இருக்கலாம்,
ஒரு கடிதத்தில் கவிதையாய்ச் சொல்லி இருக்கலாம்,
ஒரு தோழியிடம் சொல்லச்சொல்லி அனுப்பியிருக்கலாம்..

ஆனால்,

கட்டிப்பிடித்துத்தேம்பியழ உன் தோள் கிடைத்திருக்காதே..!

😡
கோபம் வந்த போது
"மூஞ்சப் பாரு, போடா..."
என்று திட்டிவிட்டேன்.

என் மூஞ்சைப் பார்த்து.
"என் மூஞ்சிக்கு என்ன கொறச்சல்" - என்கிறான்.

இப்போது
அவன் மூஞ்சைப் பார்த்துச்
சிரிக்கத்தான் தோணுகிறது..!

😍
முடிந்தது வெட்கப்புத்தாண்டு என்றும்,
வருவது முத்தப்பொங்கல் என்றும்,
கிள்ளிச் சிரிக்கிறான்..

....ச்சீ போடா

நினைத்துப்பார்க்கவே

வெட்க‌மாய் இருக்கிற‌து..!!

😋
நீ அருகாமையில் இருக்கும்போதும்
உன்னை அலைபேசியில் அழைப்பது,

உன் ரிங்டோன் கேட்டு ரசிக்கத்தான்..

""மலரே நின்னே கானதிருன்னால்
மிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே..!!"

😘
முத்தம் கொடுத்துப்
பிரியாத சந்திப்பைச்
சந்திப்பாக ஏற்றுக்கொள்வதில்லை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

வெட்கத்தை கேட்டால் என்ன தர.?




Ø

ஊசி போட்ட கையில்

முத்தம் வைக்கிறாய்..

மறுமுறை உதட்டில் ஊசி போடவேணும்

எனக்கு..

Ø

முத்தத்தில் உருகி,

வெட்கத்தில் உறைந்த கணத்தில்.

நீரானது பெண்மை.!


Ø

மெக்கானிக்  ஷெட்டின் பின்புறம் இருந்துபேசிக்கொண்டிருக்கிறோம்..

கருத்த இரவு இருளாகவும்,

வெல்டிங் பற்றவைப்பு வெளிச்சமாகவும்

தோன்றி மறைகிறது..

இருளுக்கு முத்தமென்றும்,

வெளிச்சத்திற்கு வெட்கமென்றும்

பெயர் வைக்கிறேன்

நான்…!

Ø

தீரப்பேசி பகல் தீர்ந்தபின்,

"வீட்டுக்கு போறேன்" என விடைபெறும் தருணத்தில்,

"சரி, 10 எண்ணுற வர பேசிட்டு இரு"

என்று சொல்லிவிட்டு,

ஐந்துக்கு மேல் எண்களை
தாண்டாமல் இருக்கிறான்...

Ø

"இதயத்தை பிளந்து காட்டும் ஆற்றல் இருந்தால்,
உன்னை உனக்கே அறிமுகம் செய்து வைத்திருப்பேன் " என்கிறான்.

கண்வழி ஊடுருவி கன்பார்ம் செய்துகொண்டேன்..

ப்ரேமத்தின்டே ஸ்தலம்
ஹிருதயம் எங்கில்,
வாதல் கண்ணாணு.. 💖

Ø

சொற்களை முத்தங்களாக்கி
வினா கேட்கிறாய்..

வெட்கத்தையே விடையாய் தருகிறேன்.

முத்தமிழும் வெட்கங்கொண்டது உன்னால்...!! 💖

..நான் இங்கு சுகமில்லை நீ.?.





கடவுளே
அவன் காய்ச்சலை எனக்கும்
என் காதலை அவனுக்கும்
இப் பக்தைக்கு பரிமாற்று.


ஹலோ சொல்லும்போதே
கண்டுபிடித்துவிடுவேன்,

நீ

காதலில் இருக்கிறாயா.?.
இல்லை
காய்ச்சலில் இருக்கிறாயா.? - என்று

உன் அம்மாவுக்கு மட்டுந்தான் தெரியுமா.?.
நானறிய மாட்டேனா என்ன..??.


உன் நெற்றி முத்தத்திற்காக
நித்தம் வரட்டும்
கடுஞ்ஜுரம்  எனக்கு..!..


உன் சின்ன காய்ச்சல்தான்
என் பெரிய கவலை
தனக்கு வந்தால் தான் தெரியும்
காதலும் காய்ச்சலும்.?!.


சோம்பலாய் படுத்திருக்கிறாய் .
சோகையாய் புன்னகைக்கிறாய்.

கண்ணுக்குள் காதல் கலைந்து,
ரொமாண்டிஸம் உதட்டில் ஒளிந்து.


காதல்
வாழ்தலை பற்றிய
அச்சத்தையும்,

காய்ச்சல்
வாழ்க்கையை பற்றிய
அச்சத்தையும்
கற்பிக்கிறது.


உள்ளங்கை அழுந்த உரசி சூடேற்றலாம்,

வேளை பார்த்து விழுங்கத்தரலாம்
மாத்திரையும் மருந்தையும்.

நெற்றியில் முத்தமிட்டு,
திருநீற்று பொட்டு வைக்கலாம்.

இல்லை,

சேர்த்தணைத்து முத்தமிட்டு
சேர்த்து கொள்ளலாம் உன்னுடைய காய்ச்சலை..

நா வேறென்ன செய்யட்டூ(ம்)..?.


கைக்குழந்தையைபோல்
ஈனஸ்வரத்தில் முனங்குகிறாய்.

கன்னித்தாய் என உணருகிறேன்.

ஆலயத்தில் அகல்விளக்கையும்
தேவாலயத்தில் மெழுகுவர்த்தியும்
ஏற்றி வழிபடுகிறேன்.

ஒரே சுடர்
ஒரே பிராத்தனை
இரண்டிலும் ..

சாமியில் என்ன பெரியசாமி சின்னசாமி .?.


"நா உன்ன பத்திரமா பாத்துக்கிறேன்" ன்னு
நா சொல்றத விட,

"நா உன்ன பத்திரமா பாத்துக்கிறேன்" ன்னு
நீ சொல்றது தான் நல்லாருக்கு..


சாதாரண காய்ச்சல்
சளி காய்ச்சல்
வைரல் ஃபீவர்
இன்ஃபெக்‌ஷன்
ஆர்.பி.சி. டபிள்யு.பி.சி.
பயோ ஹெமிஸ்ட்ரி
இதெல்லாம் எனக்கு தெரியாது,

புரியவும் செய்யாது.

எனக்கு தெரிந்ததெல்லாம்

உனக்கு காய்ச்சல்.

உனக்கு காய்ச்சல்.

உனக்கு காய்ச்சல்.


சோபிக்க முடியாத சோம்பலில்

படுத்திருக்கிறாய்..

நித்தம் ஏங்காத நாட்களே இல்லை..
நீ தூங்கும் தலையணையாய்

பிறந்திருக்கக்கூடாதா என்று.!.


ஏன்டீ
"உம்"முன்னு இருக்க
என்னும் அம்மாவிடம்

"...ம்....

ம்ஹீம்..."

என பதில் மடுத்தேன்.,

உதடுகள் பிரியாது
வேறெதை சொல்வது

"ம்" மை தவிர்த்து.?.


நடுக்கும் குளிரில்,

கம்பளியாய் அணைத்துக்கொண்டிருக்கிறேன்..

உருகி, ஊடுருவி வரலாம்
உன் முதுகுப்புறம்..!.



தகிக்கும் வெப்பத்தை
குழைத்தெடுத்து,
நெற்றியில் ஒரு கண்ணாய் மாற்றிக்கொள்
எம்பெருமானே...


உரோமம் அடர்ந்த  உனது மார்பில்
யூகலிப்டஸ் தைலம் தேய்த்துவிடுகிறேன்..

நனைகிறது ஊசியிலை காடு..!.


நீ ஒன்னுமில்ல எனும் போது,
ஏதோ ஒன்று இருக்கிறது.

பரவால்ல எனும் போது,
பக்கத்தில் இருக்க சொல்கிறது.
ஒரே ஒரு கோரிக்கை தான் உன்னிடம்

பொய்கூட சொல்லிக்கோ,
உண்மையை மறைக்காதே..  ப்ளீஸ்...


நான், நான் தீர்ந்து

நீயாக இருக்கிறேன்..

என்னுள் இருக்கும் உன் நானுக்கு

உடல் சுகமில்லை.,

உன்னுள் இருக்கும் என் நானுக்கு

மனம் சுகமில்லை..

⚫⚫⚫

“பிரிவாற்றாமையின் ஆர்கமெடீஸ் தத்துவம்” அல்லது “மழைப்பாடல்”.


Ø

மழைநீர் புகுந்த என் வீட்டில்

கட்டிலில் கால்குத்தி

அமர்ந்திருக்கிறேன்.,

நாற்புறம் நீர் சூழ்

கட்டில் தீவு...!..

Ø

மழையில் முறிந்த

முல்லைக்கொடியில்

மண் படா பூக்களை

சேகரித்துத்தொடுத்து வைத்தேன்..

உன் நினைவில்

சூட்டிக்கொண்டு

சுடர்கொடியானேன்..!.

Ø

மழையின் கொண்டாட்டங்களை

உன்னோடு ரசித்திருக்கிறேன்.

மழையின் துயரங்களில்

உன் மடியில்லை.

நீர் புகா நிலத்தில்

தூரத்தில் துயரத்தை

மழையென “ தெறிக்கவிடலாம்”

வா..!.

Ø

புழுக்களையும் பூச்சிகளையும்

சுமந்து புற்றேகும் எறும்புகள்.

குறு அலகில் கூடுகட்டிக்குடிபுகும்

பறவைகள்.

பண்டகசாலையில் பதுக்கல் செய்யும்

வணிகமார்கள்.

கருப்பட்டியையும் அரிசியையும்

பரண் பத்தாயத்தில்

சேமிக்கும் பாட்டிமார்கள்.

ஊரெல்லாம் குறிப்பறிவிக்கிறது

மழை நாளை.

நானும் மனதினுள் பத்திரப்படுத்துகிறேன்..

உனது ஓர்மைகளை..!.

Ø



தா

 த் தத் தா..

ஒரு முத்தந்தா..



தா

த் தத் தா..

ஒரு முத்தந்தா..

ஒரு முத்தந்தா..

ஒரே தாளகதியில் விழுகிறது

முற்றத்து மழை..!.

வெப்பமண்டல உவர் நில தரை போல

வெடித்து கிடக்கிறது

உதடு.

மழைபோல் நனைத்து ஈரமாக்கு..!.

Ø

கவிதை அல்லாது எதைப்பற்றி பேசுவது.?.

நாள் மலர் காசு பிறப்பு

எழுத்து அசை சீர்

அடி தளை தொடை

இலக்கணம் மீறாத

மரபுக்கவிதை நான்.!.

மீசை என்னும் தலைப்பிட்டு,

ரெட்டைவரி உதடு கொண்ட ஹைக்கூ கவிதை நீ.!.

வாழ்தலின் அழகியல் பாடும் நவீன கவிதை நாம்.!.

வேறு எதைப்பற்றி பேசுவது கவிதை அல்லாது.?.

Ø

நம் பேர் பொறித்த சங்கு

தவறிவிழுந்து உடைந்தது,

உடைந்த சங்கில்

ஒலிக்கிறது

கடலின் குரல்..!.

Ø

மழை நின்று

மௌனத்தில்

ஒலிப்பது

உன் குரல்.

நிசப்தம் என்பது

நீயின்றி இருப்பது..!.

Ø

கூம்புக்குடுவையில்

ஒட்டாது உருளும்

பாதரசமென.,

நிலையற்று தவிக்கிறது

மனசு..!.

Ø

இன்றைய நாளின் நேற்று நினைவினிலில்லை.

நாளையை நினத்து கடத்திக்கொண்டிருக்கிறேன்.

நேற்றின் நாளையான இன்றைய நாளை..!.

Ø

கண்ணீரில் மூழ்கும்

துயரத்தின் எடை

வெளியேற்றப்பட்ட

கண்ணீரின் எடைக்கு

சமம் என்கிறது

பிரிவாற்றாமையின் ஆர்கமெடீஸ் தத்துவம்..!!

தவமின்றி கிடைத்த வரமே....🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

நான் கவிதை.!

நீ கவிஞன்.!

முற்றுப்புள்ளியில் முடிகிறது

முத்தம்.....!!


🌸

எதிர்பாரா தருணத்தில்

நீ தரும் முத்தத்தை

எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.!!!


🌸

தவம் என்பது ?

நீ வர காத்திருப்பது.

வரம் என்பது ?

நீ வர பார்த்திருப்பது !!


🌸

நாத்திகவாதி கோவிலுக்கு வெளியிலே நின்று விட்டான்..

நான் கடவுளிடம் பிராத்தித்துக்கொண்டிருக்கிறேன்..

என் காலணியை காவல் காத்துக்கொண்டிருக்கிறது காதல்தெய்வம்.!!


🌸

என்றைக்குமானது இன்றைய பிராத்தனை.

இன்றைய பிராத்தனை,

இம்மையும், மறுமையும்

உன் அண்மையிலிருப்பது..!!

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

☔ மறைவாய் சொன்ன கதைகள். ☔




பேய் மழை பெய்து கொண்டிருக்கிறது.

ஒரு குடையில் ஒதுங்கி நிற்கிறோம்.

தேவதை மழை பெய்வதாக கூறுகிறாய்...

றெக்கைகள் முளைக்கிறது என் விலாப்புறம்....!!


விட்டு விட்டுப்பெய்கிறது
விடாது பெய்கிறது
விடியல் வரை பெய்கிறது
மழை போல் உன் நினைவு..!


உனக்கும் எனக்குமான
ஒற்றை முகவரி இட்ட கடிதத்தை
ஊரெல்லாம் அஞ்சல் செய்கிறது

இந்த மழை...!


இந்த மழை நாள்
பின்வாசல் தாழ்வாரத்தில்
நாய்க்குட்டி போல்
சோம்பிக்கிடக்கிறது,

இன்னுமிருக்கிறது

முன் பனியும்
பின் பனியும்...  😜😜😜


வெதுவெதுப்பான
தேனீர் கோப்பையை
உள்ளங்கையில் வைத்து
சூடேற்றிக்கொண்டிருக்கிறேன்...

சரி..,

நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்..??


வள்ளுவன் சொன்ன
ஊடல் உவகையயும்

குறுந்தொகையின் தலைவிகூற்றையும்

பாரதியின் கண்ணன் பாட்டையும்

கதையாய் சொல்கிறது

மறைவாய் இந்த மழை..!

☔☔☔☔☔☔☔☔☔☔☔

❤ வில்லோடு வா நிலவே ❤




மழை நான்
நிலம் நீ
செம்புலப் பெயல் நீர்
முத்தம் முத்தம்..!


சூரியன் நீ
சந்திரன் நான்
கிரகணம் என்பது
ஊடல் ஊடல்..!


உயிர் நான்
மெய் நீ
உயிர்மெய் என்பது
கூடல் கூடல்..!


விரல் நீ
வீணை நான்
ஸ்வரம் என்பது
ஸ்பரிசம் ஸ்பரிசம்..!


கடல் நான்
கரை நீ
அலை என்பது
தீண்டல் தீண்டல்..!


மரம் நீ
மலர் நான்
கனி என்பது
காதல் காதல்..!


நாணம் நான்
தேகம் நீ
ஆடை என்பது
காமம்...காமம்..!

❤❤❤❤❤❤❤

🍭 ....ச்சோ ஸ்வீட். 🍭




🍭🍭🍭🍭🍭


உன் இனிப்பு முத்தம் வாங்கிய
அலைப்பேசியை

எறும்புகள் மொய்க்கிறது
என்னவரே...!!!!!


🍭🍭🍭🍭🍭


நீ அளந்த பொய்களை எல்லாம்
அடுக்கிவைத்திருக்கிறேன்

ரசிக்க கொஞ்சம் சிரிக்க கொஞ்சம்.!


🍭🍭🍭🍭🍭


நா செத்துட்டா என்ன செய்வ?
என்று அபத்தமாய் கேட்டு சிரிக்கிறான்...

"உன்ன கொன்னதுக்காக ஜெயில்ல இருப்பேன்"

என்று சொன்னேன்..!!

இனி எதுனா கேப்ப...



🍭🍭🍭🍭🍭


முத்தம் கொடுக்குறாப்ல
உதட்ட குவிச்சிட்டு,

செல்ல குட்டி
கன்னு குட்டி
என்று கொஞ்சியவனை

பன்னி குட்டி என்று கொஞ்சினேன்....

மூஞ்ச பாக்கணுமே,
பன்னிக்குட்டியாட்டம்... 🐷



🍭🍭🍭🍭🍭


சரி, இனி உங்கிட்ட பொய்யே சொல்லமாட்டேன் என்று
பொய்சத்தியம் செய்கிறான்..

தல வெடிச்சு செத்துட்டா;
முண்டத்துக்கா தாலிகட்டுவ
முண்டம்...!



🍭🍭🍭🍭🍭


வெய்யிலை கோபமென்றும்
மழையை கொஞ்சலென்றும் கொண்டால்..,

வெய்யில் நாளில் பெய்யும் கள்ள மழை நம் காதல்.. ❤


🍭🍭🍭🍭🍭

Wednesday, June 8, 2016

❤ஹே சண்டக்காரா❤





சரசரவென உள்நுழைந்து
யாரேனும் இருக்கிறார்களா என
எட்டிப்பார்த்து..

முத்தமிட்டுச் செல்கையில்
பூனை ஒன்று "மியாவ்" என்கிறது..!

இனி பூனையிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.!

"யார்கிட்டயும் சொல்லிடாத ப்ளீஸ்"





முதன் முதலாய் உன் பெயரெழுதிய பேனா

இன்றுவரை உன் பெயர் மட்டுமே

எழுதிக்கொண்டிருக்கிறது.!





தோழியர் முன் பரிகசிப்பாய்
கிள்ளிப் பார்த்து கனவா  என்பாய்
உதட்டைச்சுழித்து சிரிப்பாய்
புருவம் சுருக்கி முறைப்பாய்
கண்கள்  விரிய பரிசளிப்பாய்
சணடையிடுவாய்
சமாதானம் செய்வாய்..

உன்னுடைய பாவனைகளை ஒன்றாய்ச் சேர்த்து

இன்றைய கனவு காணுகிறேன்.!





முன்னறிவிப்பின்றி  பெய்கிற மழையை போல,

உன் நினைவுகள் வரும்போதெல்லாம்

காய வைத்த துணி எடுக்கச் செல்வதாகக் கூறி

மொட்டை மாடி சென்றுவிடுகிறேன்..!




சமாதானத்திற்குப் பிறகும்

உம்ம்.. என்று முகத்தை வைத்திருப்பான்..

கைகளிலிருந்து விடுவித்துக்கொள்ளும் நாய்க்குட்டி போல,

மனசு உடல் விட்டு துள்ளித் தவிக்கும்

சட்டையைப் பிடித்து

"லவ் யூ சொல்லுடா.. "

என சண்டைபிடிப்பேன்.

சொன்னபின் தான்

உண்மையாக சமாதானமாவான்..!




நான் பெரியவளா நீ பெரியவனா

எனக் கேள்வி எழும்போதெல்லாம்

நானே பெரியவள் என்பேன்..!

பார்த்தாயா..

ஸ்மார்ட் போனின் பாஸ்வேர்டாய் உனை மாற்றி,

கைகளுக்குள் வைத்திருக்கிறேன்.!!




சோகமாய் முகத்தைவைத்துக் கொண்டு

இனி எங்கூட பேச மாட்டியா எனும்போது.,

.........

இறுக்கம் தளர்த்தி

சிரிக்க ஆரம்பித்துவிடுவேன்..!!
❤❤❤❤❤❤❤❤❤❤

❤ நினைவோ ஒரு பறவை ❤




கைகளற்றவன் தோள்பட்டையால்
கண்ணீரைத் துடைப்பது போல,

அவ்வளவு இயல்பாய்
அனிச்சையாய் வந்துவிடுகிறது,
உன்னைப் பற்றிய கவிதைகள்.!




எப்படியடா நினைவுகளின்
சுமை தாங்கி நிமிர்ந்து நடக்கிறாய்.?

நான் அங்கங்கு மோதி
தடுக்கித் தடுக்கி விழுகிறேன்..!




அஞ்சு நிமிஷம் கழிச்சு பேசுறேன் என
அழைப்பை துண்டிக்கும் போதெல்லாம்,

ஒவ்வொரு நிமிடத்திற்கும்
ஒவ்வொரு மணிநேரம் காத்திருக்கிறேன்.!




அழுதபடி முத்தம் கொடுத்த அந்த இரவில்
மழை பொழிந்தது.!

இருள்கவிழ்ந்த இரவில் நம் குழந்தைக்கு,
நிலா என்றுப் பெயர் வைத்தோம்.!




நீண்ட பயணங்களில்
தூங்கும் உன்னைத்
தோளில் தாங்கி
விழித்திருக்கவேண்டும்.!




மெதுவாகப் பேசு

விழித்துக் கொண்டிருக்கிறது இரவு.!




உதட்டிற்கும் தேனீர்க் குவளைக்கும்
உள்ள நெருக்கத்தில்
காதல் சுரக்கிறது.

பருகக் கூடுகிறது தேனீர்-பிரியம்.!




உனது தேர்வுகளில் உருப்படியானது
நான் மட்டுந்தான்எனும் போது,
இருவர் கண்ணிலும் பெருமிதம்.!

❤ நாட்குறிப்பு ❤




சீப்பைத் தலையில் வைத்துக்கொண்டே,

வீடெல்லாம் தேடிய நாளில்,

முதன்முதலில் நான் உணர்ந்தேன்

உன் மீதான காதலை.!




பஸ்ஸில் நெரிசல் அதிகம் என்று
பைக்கில் அழைத்துச் செல்வான்..

எனக்குத் தெரியாதா.,

பஸ்ஸில் நெரிசல் அதிகம் என்றும்,
பைக்கில் நெருக்கம் அதிகம் என்றும்.!




டைரிக் குறிப்புகளில்
முத்தங்களைத் தவிர
வேறெதுவும் இருப்பதில்லை..!




நீ அழகாகவும் இருக்கவேண்டாம்
அன்பாகவும் இருக்கவேண்டாம்.

அப்படியே இரு,

அன்பாகவும், அழகாகவும்
நான் மாற்றிக்கொள்கிறேன்.!




நீ இன்னும் எத்தனை நேரம் தான்
என் கண்களையே பார்த்துக் கொண்டிருப்பாய்.,

நான் இன்னும் எத்தனை நேரம் தான்
உன் காலணிகளையே பார்த்துக்கொண்டிருக்க..!?




திட்டும்போதாவது புன்னகைக்காதே,

கோபத்தை விடுத்து, கொஞ்ச ஆரம்பித்து விடுகிறேன்..!




உள்ளங்கை மருதாணி காயும் முன்னே,
ஊட்டிவிடச் சொல்லிடணும்.!

❤ களி ❤






நான் நனைய
நீ குளிக்கவேண்டும்.!




என் பத்துவிரல்களுக்குள்
உன் பத்துவிரல்கள்.

பார்த்தாயா.

பத்துப் பொருத்தம்
பொருந்தி இருந்த
அதி உன்னத ஜாதகத்தை...!




உத்தரவின்றி உள்ளே வா
என் கனவில்.,

அழைப்பு மணியடித்து
எழுப்பிவிடாதே என் துயிலை.!




நீ ஆறுதல் சொல்லுவதற்கென்றே,
அழுதுதொலைக்க வேண்டும்.!




முதல் முத்தம் ஞாபகம் இருக்கிறதா..?

எச்சில் மிட்டாயோடு
இதழ் தின்னத்தந்தது.?

அதெல்லாம் உனக்கு
நினைவிலிருக்காது..

அப்போது நீ சிறுவன்..!




நானே கவி

நீயே களி

நானே சிலை

நீயே மலை

நானே இசை

நீயே இறை.!

❤ ஃப்ளையிங் கிஸ் ❤






காதலின் கருகொண்டு
எழுதிய இக்கவிதைகளை
தலைச்சன் பிள்ளை என்பேன் நான்..!




நிழலில் கூட அழகாய்த் தெரிகிறாய்..

ச்சே...

நான் நிலமாகாது போனேனே...!




மீசை என்னும் தலைப்பு வைத்த
இரண்டு வரிக் கவிதை
உன் உதடு.!




உயிர் மாற்று அறுவைச்சிகிச்சை
உண்டென்றால்
உனக்கெனத் தானம் செய்வேன் என்னுயிரை.!




கன்னத்தில் நீயிட்ட
உஷ்ண முத்தமொன்று.

ஆவியாகிறது கவலையின்
கண்ணீர்த் துளி.!




ஏன் பேசல..? என கோபப்படுவதும்..

நா கோவத்துல இருக்கேன்..ன்னு பேசாதிருப்பதும்..

கபட நாடக வேஷதாரியடா நீ.!




வீட்டுல ஆள் இருக்காங்க
பேசமுடியாது என்றதற்கு
பேச வேணாம்..
மூச்சு மட்டுமாவது விடு என்கிறான் லூஸு.!!




ஜன சந்தடியான வீதிகளில்
இதழ்களால் தரவேண்டிய முத்தத்தை
விழிகளால் தந்துவிட்டுப் போகிறான்..!

வலைபாயுதே கண்ணா.. ❤






இராமனாகலாம் பிற்பாடு
கண்ணனாகடா இப்போது.!




இதழைத் திறந்து இதழை மூடி,
குழலென வாசிக்கிறான் இதழை.!



துப்பட்டாவின் நுனியைத் திரியாக்கி
காதிற்குள் நுழைத்தால்
கோபப்படுகின்றாய்...

என்ன பாடுபடுத்தி இருப்பாய் கோபியரை...?




நெருக்கிப் பிடித்து,
இறுக்கி அணைத்து,
இடுப்பை வளைத்து,
வில்லென உடைக்கிறாய்..!

இராமா... இராமா...

நீ கிருஷ்ணன் என்பதை
மறந்துகொண்டிருக்கிறாய்.!




ஐம்பதுகிலோவிற்கும் குறைவான
என்னைத் தூக்கிநடக்க இத்தனை சிரமப்படுகிறாயே,

கோவர்த்தனத்தை எப்படித் தூக்கினாய்...?



நீ கிருஷ்ணாயில்.!
நான் பாமாயில்.!




உன் ப்ரொஃபைல் பிக்சர் ரசிப்பதற்கும்.

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் பார்ப்பதற்கும்

தினம் தினம் வலைபாய்கிறேன்...!...கண்ணா

மிழிவேகிய நிறமெல்லாம்








போடி எனும் போது,
என்னிடமிருந்து மொத்த உரிமையையும்
நீ எடுத்துக் கொள்கிறாய்.!



உன் கண்ணைத் தவிர
எந்தவொரு கண்ணாடியும்
என்னை அழகாய்க் காட்டியதில்லை.!



உன் கைகளைப் பிடித்தபடி
சாலையைக் கடக்கவேண்டும்
குருடானாலும் சந்தோஷம்.!



முகமெங்கும் முள்பூத்த
ரோஜாப்பூ கன்னம்.❤



பார்த்தாயா.?
பார்த்தாயா.?.
உன்னையும் என்னையும் சுற்றியே,
இந்த சூரியன் சுற்றுவதைப் பார்த்தாயா...??




வாடா போடா கூடாது
இனி மரியாதை கொடுத்து தான்
அழைக்கனும் என்றான்.

சரிங்க புருஷர் என்றேன்.

வெடுக்கெனத் திரும்பிக் கொண்டான்.

திரும்பி நின்று சிரித்துக் கொண்டிருப்பான்...

எனக்குத் தெரியும்.....❤

கந்தர்வன்







அப்பாவின் ஃப்ரஷ்ஷில் பல்துலக்கிவிட்டேன்.

அப்படிக் கெடுத்துவைத்திருக்கிறாய் என்னை...!



தினமொரு கவிதை

நீயின்றி சாத்தியமில்லை.!



பேசிச்சிரித்து,

பேசிய சொற்களை தனியே பேசி,

சிரித்ததை நினைத்துச் சிரித்து..

தீர்ந்து போச்சி இந்த இரவு.!



முழுச்சவரம் செய்த நாளில்

மீசைஇருந்தால் தான் ஆணுக்கு அழகு

என்று தத்துவம் பேசினேன்.

காரணம் காதில் சொன்னாய்.

ஒருவாரத் தூக்கம் போச்சா..



நாம் எல்லையோடு பழகுகிறோம்,

நம் எல்லையின் வரைவு நீட்டிப்புகளை

நானே வரையறுக்கிறேன்.!😉



சிரித்துச் சிரித்து அழ வைக்கும் உனக்கு

அன்பிலன் என்று பெயர்.

அழும்போது சிரிக்கவைக்கும் உனக்கு

மிருதுனன் என்று பெயர்.



கன்னத்தைக் கிள்ளி அனாயாசமாய்க் கடந்து போய்விட்டான்..!

நிலைகொள்ளாதுத் தவிக்குது மனசு.❤❤



உன்னை நான் கந்தர்வன் என்றே
நம்பிக்கொண்டிருக்கிறேன்,

நீயோ மனிதர்களைப்போல
வரவுக்கும் செலவுக்கும்
புலம்பிக்கொண்டிருக்கிறாய்...!

❤❤❤❤❤❤❤❤

ஆலிங்கனம்


🔘🔘

நான் முடித்த இடத்தில்

நீ துவங்கும் அந்தாதி

முத்தம். ❤



🔘🔘

நீ ஞாபகப்படுத்துவதற்கென்றே,

எதோ ஒன்றை மறந்து தொலைக்கிறேன்

அனுதினமும்.



🔘🔘

குழம்புக் கரண்டியின்
குழிந்த பக்கத்தில்
தலைகீழாய் தெரியும் உலகம்.

குழம்பிப்போய் நிற்கிறேன்.

ஆகாசத்தில் மீன்கள் நீந்திக்கொண்டிருக்கின்றன..

நீலக்கடலில் பறவைகள் பறந்துகொண்டே....



🔘🔘

கட்டங்களுக்குள் சிறைபட்டிருக்கும்
நாட்களின் மீதோ,

வட்டத்திற்குள் அடைபட்டிருக்கும்
நேரங்களின் மீதோ,

எனக்கு நம்பிக்கையில்லை..

ஆதூரமாய் அணைத்து
முகம் பார்த்துச் சிரித்தால் பகல்.

ஆலிங்கனம் செய்தபடி
கண்சொக்கிக் கிடந்தால் இரவு.



🔘🔘

கொல்வதானால்
ஒற்றைச் சிலுவையில்
ஒன்றாய் அறைந்து
கொல்லுங்கள்.

"நச்" சென்று நடுமார்பிலிறங்கும்
ஆணியிலிருந்து
ஒழுகும் ரத்தம் உங்களுக்கு
அமைதியைத் தருவதாக

ஆமென்.!


🔘🔘

டார்லிங்கு டம்பக்கு



😍

"உன் முகத்தைப் பார்த்தால்,
திட்டக்கூடத் தோணலை"-என்றால்,

திரும்பி நின்று "இப்போ திட்டு"-என்கிறான்.

திரும்பி நின்று சிரிக்கத்தான் தோன்றுகிறது.!


😍

கோபம் முற்றி

"போடா..
உனக்கு அசிங்கமான
பொண்ணுதான் கிடைப்பா.,"

என செல்லச் சாபமிட்டால்.,

"உன்ன விட அசிங்கமான பொண்ணுக்கு
நா எங்க போறது.?" என்று

மீண்டும் கோபமேற்றுகிறான்.!


😍

இரண்டு விரல் நீட்டி

ஒன்றைத் தொடு

எனும் போதெல்லாம்,

தொடும் விரலில்

வைத்திருக்கிறாய்

ஆச்சரியங்களை.!


😍

எந்த நாயகியும்
சொல்லாதவிதத்தில்,

எந்த காட்சியிலும்
வராத இடத்தில்,

எந்த ஒளிச்சுருளும்
பதியாத சூழலில்

உன்னிடம் சொல்லவேண்டும்

என் காதலை.!


😍

காதல் சொல்லிய
நாட்களிலிருந்து கணக்கிட்டால்,

ஒன்றரை வயதுக் குழந்தை நீ.!


😍

பனிபடர்ந்த சிமெண்ட் தரையில்
காலடியாய்த் தொடருகிறாய்.!


😍

நீ உடுத்திய சட்டையில்
வியர்வையாய்ப் பூத்திருக்கிறேன்.!


😍

நீ புரண்டு படுக்கும் போதெல்லாம்,
உருண்டு விழுகிறது என் இதயம்.! ❤

🌀மேஜிக் மொமெண்ட்ஸ்🌀


🌀
களவு கனவு என
இரு புன்னகைகளை
வீசிச் செல்கிறாய்...

கனவு இரவு முழுக்க வியாபிக்கிறது.!

களவு இளமை முழுக்க வியாபிக்கிறது.!!

🌀
உன்னப்போல ஒரு பையனுக்கும்,
என்னப்போல ஒரு பொண்ணுக்கும்,
கல்யாணம்.

உன்னை உன்னையாகவும்,
என்னை என்னையாகவும்,
கல்யாணத்தை கல்யாணமாகவும்,
அட்சதைத் தூவி வாழ்த்துகிறேன் நான்..!

🌀
தோழிக்குத் திருமணம் என்று,
உனைக் காணும் பொழுதெல்லாம்
ஞாபப்படுத்துகிறேன் நான்.!

🌀
கைரெண்டும் சேர்த்து,
கன்னத்துல ஒட்டி,
தலைய லேசா சாச்சு,

தூரமா நின்னுக்கிட்டே,

இன்னும் தூங்கலியா.? ன்னு
கேட்டீல்ல...?

அன்னிக்கி தூக்கம் போச்சி...

உஸ்ஸ்ஸ்...

🌀
இன்பத்தால் நிறைந்தது வாழ்வு,

இன்பத்தில் திளைக்கிறது
சூரியனும் சந்திரனும்.

இன்பத்தைப் பதிவுசெய்கிறது
மழையும் வெய்யிலும்.

இன்பத்தின் துவக்கம்
ஒரு பூ மலர்வது.

இன்பத்தைப் பரப்புவது பறவையும் பாடல்களும்.

ஒரு குழந்தையின் முத்தம்
இன்பத்தை இன்பமாக்குகிறது.

இன்பத்தால் நிறைந்தது வாழ்வு.

இப்படிப் பேசிக்கொண்டே இரு...

இன்பத்தில் நிறைந்து வழிகிறது

என் தேனீர்க்கோப்பை..!
🌀

மச்சங்களுக்கு கூச்சமில்லை




உங்களோடு நானும் என்னோடு நீங்களும் உரையாடவும், புரிந்துகொள்ளவும் பொதுவில் மொழி ஒன்று இருக்கிறது. பின் எதற்கு இந்த கவிதைகள்.? கவிதைகள் உங்களுக்குள் என்ன நிகழ்த்துகிறது.?

அரைகுறையாகவோ, முழுமையாகவோ எல்லோரும்தான் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைப் பதிவு செய்ய விழைந்தால் அதில் என்ன இருக்கும்.?

துயர்மிகுந்த ஒரு கண்ணீர், எழில்மிகு இயற்கை, கொண்டாடத் தருணங்கள், கனவு, இறை பக்தி, இயலாமை, முற்றிய காமம், முதிராக் காதல், தனிமைப் பிரிவு, சூழ்ச்சி, வஞ்சகம், ஆற்றாமை, கோபம் இவ்வாறு உங்களுக்குள் நேர்ந்த தருணங்கள் தானே.?

ஆக நேர்தலே கவிதை.!

நேர்ந்த கணங்களை நேர்த்தியான மொழியில் சொல்வது தேர்ந்த கவிதை.

ஆக "நேர்தலே கவிதை"

வார்த்தைப் படிமங்களற்றவை மற்றும் நுட்பமான பன்மொழித்தன்மையானவை அல்லது இலக்கியச் செறிவான மரபுநடை கொண்டவை என கவிதைகள் மீதான நம் புரிதல் கற்றலுக்குத்தக்க மாறிக்கொண்டிருக்கிறது.

எனது முகநூல் நண்பர் "Rajamohamed Kanmani" அவர்கள் "பால்யகால சொர்க்கவெளி" மூலம் தனக்கு நேர்ந்த கணங்களை நேர்த்தியாக தந்திருக்கிறார்.

தொலைத்த பால்யம், மகள் நேசம், எள்ளலான ஒரு அறச்சீற்றம், நட்பு பாரட்டல், பிரிதலின் கணம், நகர்மயமாதல் என சமூக நோக்கில் கலவையாக தன்மொழியில் தான் பார்த்த, பாதித்த நிகழ்வுகளை தந்திருக்கிறார்.

மொத்தம் 46 கவிதைகள் கொண்ட கவிதைத்தொகுப்பு. வாழ்த்துரையில் கவிஞர் அறிவுமதி, கவிஞர் புவியரசு, கவிஞர் சினேகன், இயக்குனர் சேரன், இயக்குனர் பிருந்தா சாரதி, இயக்குனர் பேரரசு என பிரபலங்கள் அத்தனை பேரும் சிலாகித்த கவிதைகள் போக எனக்கும் ஒன்று இருக்கும்தானே.? அது உங்களுக்கும்.....!



#மச்சங்களுக்கு_கூச்சமில்லை.

மிகவும் குறும்பானவை..

எப்போதும்
பிறர் காண முடியாதபடியான
மறைவிடங்களையே
தேர்ந்தெடுக்கின்றன..

வகை வகையான
குறும்பு மச்சங்கள்..

இசையில் ஆர்வம் உள்ளவை
காதோரங்களில் வசிக்கின்றன..

"கமல்" மச்சங்கள்
உதடுகளில் வாழ்கின்றன..

சினிமா மச்சங்களுக்கு
தொப்புள் பிடிக்கிறது..

நட்பு பாராட்டுபவை
உள்ளங்கைகளில்
உறைகின்றன..

வேடிக்கை பார்க்க
விரும்புபவை
கண்களுள் குடியிருக்கின்றன

கண்டுபிடி பார்க்கலாம் என
காதலர்களுக்குள்
கண்ணாமூச்சி காட்டும்
சில மச்சங்கள்.!

எதிர்பால் உடம்பில்
மச்சம் தேடாத காதலர் உண்டா?

முதுகுப்புறம்,
புஜங்களின் உட்புறம்,

மார்புகளின் சரிவுகளில்,

முழங்காலுக்கு மேலே..

தொடைகளின்
வளமான வெளிகளில்..

இன்னும்

அடச்சீ..

மச்சங்களுக்குத்தான்
கூச்சம் இல்லை.;

உங்களுக்குமா

வெட்கம் கெட்டு வாசிக்கிறீர்கள்.!

😍😍😍😍

அவ்வளவுதான்.. படிக்கும்போது, தன் குறுகுறுப்பையும், புன்முறுவலையும் உங்களுக்கும் தந்திருக்கிறது அல்லவா..??
அவ்வளவு தான் கவிதை.!

மாலைத் தேனீருடன் என் அன்பு..!!

கவிதைத்தொகுப்பு  : பால்யகால சொர்க்கவெளி

ஆசிரியர் : கண்மணி ராஜாமுகமது

பதிப்பகம் : இமேஜ் & இம்ப்ரெஷன் வெளியீடு

பக்கங்கள் : 88

விலை : 70

ஊழிற் பெருவலி யாவுள.?



"இந்த உலகம் இரக்கத்திற்குரிய ஏழைமையால் வதைக்கப்படும் உலகம்" மூன்றாம் நதி- க்கு



நாவல் : மூன்றாம் நதி
ஆசிரியர் : வா.மணிகண்டன்
பதிப்பகம் : யாவரும் பப்ளிஷர்ஸ்
பக்கங்கள் : 104
விலை : 100

நகரம் பெருகிக் கொண்டிருக்கிறது, ஐடி பார்க், சிப்காட், மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணைக்கோள் நகரம், டவுண் ஷிப், லெக்ஷரி வில்லாஸ், மெட்ரோ இரயில் என நாள்தோறும்.

பருவம் பொய்த்த மழை எத்தனை விவசாயிகளைக் கொன்றிருக்கிறது, ஒரு பல்லடுக்கு மாடிகளைக் கொண்ட கட்டிடம் கட்டி முடிக்கும் முன் எத்தனை உயிர்களைக் காவு வாங்குகிறது, தேற்ற ஆளற்ற வெறுமை உமிழும் பதின்மம் எத்தனைக் கொடுமையானது, நாம் காண விழையாத அசட்டையாய் இருந்துவிட்ட மனிதர்களின் வாழ்வோட்டம் எத்தகையது, நெருங்கியடித்துப் பெருகிக் கொண்டிருக்கும் பெரு நகரத்தின் நீர்த்தேவைகளை எப்படித் தீர்க்கப் போகிறோம், ஒரு வெளிச்சத்தை நோக்கி இருளைக் கடக்கும் பாதை எத்தனை நீளமானது. என சின்னச் சின்னக் கேள்விகளை எழுப்பி பெரிய கேள்வியை வைத்திருக்கிறது இந்த நாவல்.

நிசப்தம் அறக்கட்டளை வாயிலாக விளிம்பு நிலை மனிதர்களோடு நேரடியான அனுபவம் உண்டென்பதை முகவுரையிலேயே விவரித்திருக்கிறார் வா.மணிகண்டன். அதன்மூலம் நாம் வாழும் எதார்த்த உலகின் இருட்டுப் பகுதிக்கிடையிலேயே புகுந்து அவர்களின் வாழ்வியலை மிக நெருக்கமாக இந்த நாவலின் மூலம் பதித்திருக்கிறார்.

பொட்டுமழைக் கூடப் பெய்யாத வடதமிழக எல்லையிலிருந்து அமாசை, மனைவி அருக்காணியைக்  கூட்டிக்கொண்டு மகள் பவானியைத் தூக்கிக்கொண்டு பெங்களூர் பயணப்படுகிறான்.

வளர்ந்து வரும் கட்டிடம் ஒன்றில் சித்தாள் வேலை, சிமெண்ட் கொட்டகையில் ராப்படுக்கை.  வெறும் சிமெண்ட் மூட்டைத் திருடுவதற்காக அருக்காணி திருடர்களால் கொல்லப்படுகிறாள்.

இதனிடையே பவானியின் பள்ளிக்காலம், பதின்மம், சித்திக் கொடுமை, அன்பிற்கான ஏக்கம் என விரிகிறது. பவானியின் பார்வையிலேயே மேல்தட்டு / கீழ்த்தட்டு வர்கத்தின் கலாச்சார / பொருளாதார முரண்பாடுகளைச் சொன்னவிதத்தில் அழகு.

ஒரு கையறு சுழ்நிலையில் விடப்பட்ட பவானிக்கு, பால்க்காரர் என்பவர் உதவி செய்து அவளுக்குப் பொறுப்புகளும் தந்து தன்கீழ் பணிபுரியும் லிங்கப்பாவை மணம் முடித்தும் வைக்கிறார்.

அதற்குப்பின்னான கதை நகர்வு விறுவிறுவென செல்கிறது. நம் கண்களுக்குப் புலனாகாத தண்ணீருக்கான நுண் அரசியல்,

தம் இடத்தைத் தக்கவைக்க அல்லது அடுத்த இடத்திற்கு முன்னேற கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் ஆதிக்கப் பண முதலைகளின் விளையாட்டு.

பணமும் அதிகாரமும் எதனை வேண்டுமானாலும் செய்யும், செய்தும் இருக்கிறது.

நாவலை முன்னிறுத்தி:

கதை சொல்லும் குரலின் அண்மையும், கதையின் ஊடாக ஆசிரியர் காட்டும் இருளும் வெளிச்சமும் கிறங்க வைக்கிறது. ஆனந்த விகடனில் தொடராக வந்த "வட்டியும் முதலும்" ஏற்படுத்திய பாதிப்புகளை மொத்தமாகக் கொட்டியிருக்கிறது இந்த நாவல்.

நாவலின் இடையில் அதற்கு பொருத்தமானதொரு மேற்கோள் ஆசிரியரால் இணைக்கபட்டிருக்கிறது.  ஒருவகையில் இந்த மேற்கோள் பிந்நாளில் நாயகிக்கு ஆசிரியர் சொல்லக்கூடிய குறியீடாகவும் தோன்றியது.!

"இரண்டாவது மனிதன் உள்ளவரை அனாதைஎன்று எவரும் இல்லை"

இந்த மேற்கோள் தான் இந்த நாவலின் மொத்த சாரமும்.

ஒரு கனத்த மனத்துடன் ஏழாம் உலகம்,  எரியும் பனிக்காடு, சோளகர் தொட்டி, மூன்றாம் நதி... இப்படி இந்த நாவலை அலமாரியில் அடுக்கிக் கொண்டிருக்கிறேன். வேறென்ன செய்ய.?

"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்" - குறள்-380

பவானிக்கு என் அன்பு; குழந்தைக்கு என் முத்தம்; வா.மணிகண்டன் அவர்களுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்.!

# நண்பர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.