Wednesday, September 7, 2016

கொல்வேன் உன்னை காதலா...!




அச்சமூட்டும் பெருமழையில்,
தூறல் விழாத தாழ்வாரத்தில்,
கால்களைக் கைகளால் மடித்துக்கொண்டு,
ஒருக்களித்து உதறிக்கொண்டிருக்கிறேன்.

உன்மத்தமான உறக்கம் தழுவா இமைகளில்
நம்மைப்பற்றிய துர்கனா.

ஆயிரம் வாரணம் அள்ளி சுழற்றியதாய்,
நதி நீர் என்னை சுருட்டுகிறது.

கால் கட்டைவிரலால்
எறும்பை நசுக்குவது போல.
நதி என்னை நெருக்குகிறது.!

தெப்பத்தைப் பிடித்தது மிதக்கிறேன்,
மீட்பதற்காய் எதிர்வருகிறாய்.

நதிநீந்தி எனை நோக்கிவருகிறாய்
கடலாடும் செம்படவனென.

கால் சுற்றிய கொடி என்னைக் கீழிழுக்கிறது,
உன்னைப்பற்றிய நினைவு மேலிழுக்கிறது.

தத்தளிக்கிறேன்

மிதப்பதாயும், பறப்பதாயும்
இரு வேறு நினைவு..

சிரிப்பதற்கோ அழுவதற்கோ
இருக்கும் சில நொடிகள்..

முன்பொரு ஜென்மத்தில் நாம் கடந்த காதல்,
அப ஸ்வரங்களின் ஆலாபனையாக
பின்புலம் ஒலிக்கிறது.

உறைந்த கடலில் ஒற்றைத் தெப்பத்தில்
எனை ஏற்றி நீ உறைந்தாய்.
கடல் கரைந்தாய்..

நிலா சாட்சி, நக்ஷ்த்திரம் அறியும்..

"Every night in my dreams; I see you, I feel you"

கடைசியாக முனுமுனுக்கிறேன்
இந்த யுகத்தின் கடைசிப்பாடலை..

கை நீட்டுகிறாய், உன் கண்ணெதிரே கரைகிறேன்.!

கனவு கனவுகனவு

உறக்கம் உதறி பதறி எழுந்தேன்.

கனவு கனவுகனவு

காதலா..,

எப்படி இருப்பாய்.. நானற்று நீ மட்டும்.?.

பித்தேறிப்பிறழ்மனம் கொண்டு
அலையலாம்..

உனது கழுத்தின் மெல்லிய சதைகளை
தூக்குக்கயிறு முத்தமிடலாம்..

தண்டவாளங்களில் துண்டாடப்படலாம் உனது உடல்..

விஷம் அருந்தி என் ப்ரேதஉடல் மீது சரிந்து விழலாம்...

ஓடும் இந்த நதியின் ஆளத்தில்
மூழ்கலாம் என்னை தேடி..

இல்லை,
நீர் குடித்த என்னை
நீ நினைத்து
நீ குளிக்கலாம் தீ..

சாவதற்கா வழி இல்லை,
வாழ்வதற்கற்ற இப்பூவுலகில்..?

நானற்ற உன்னை நானே கொல்வேன்..

என் விழி பிதுங்கி, சாவதற்கு முன்னான
இரு நிமிட இடைவெளியில்..

என் மடிமீது உன் தலை சாய்த்துத்தலைகோதி,

என் சுரக்காத மார்பில்
விஷம் தடவி தின்னத்தந்து
கொல்வேன் உன்னை..!

கொல்வேன் உன்னை காதலா...!